ADDED : ஏப் 27, 2024 06:00 AM

பெங்களூரு: பெங்களூரில் வசிக்கும் துமகூரு, சித்ரதுர்கா, மைசூரு, மாண்டியா ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், ஓட்டு போடுவதற்காக, சொந்த வாகனங்களில் தங்கள் ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். நகருக்குள் சென்றால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்று நினைத்து, நைஸ் ரோடு வழியாக சென்றனர்.
இதனால் அந்த ரோட்டில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தது. 'பாஸ்டேக்' செலுத்தி இருந்தவர்களின் வாகனங்கள், சுங்கச்சாவடியை வேகமாக கடந்தன. ஆனால் பணம் கொடுத்து சுங்கக் கட்டணம் செலுத்துவோரால், நீண்ட துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஓசூர் ரோடு, மைசூரு ரோடு, துமகூரு ரோட்டை இணைக்கும், முக்கிய சாலையாக நைஸ் ரோடு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாற்றுத்திறனாளி
பெங்களூரு வர்த்துாரில் வசிப்பவர் ஹிரேசாமி, 29. நடக்க முடியாத மாற்றுத்திறனாளி. 'ஸ்விக்கி'யில் உணவு வினியோகிக்கும் பிரதிநிதியாக வேலை செய்கிறார். எலக்ட்ரிக் பைக்கில் உணவு வினியோகம் செய்கிறார். நேற்று காலை வர்த்துாரில் அமைக்கப்பட்டு இருந்த, ஓட்டுச்சாவடியில் தனது ஓட்டை பதிவு செய்தார். பின்னர் அவர் வேலைக்கு புறப்பட்டார்.
அவர் கூறுகையில், ''ஓட்டு போடுவது நமது உரிமை. உரிமையை விட்டு தரக் கூடாது. ஒரு ஓட்டால் வெற்றி, தோல்வி கூட நிர்ணயம் ஆகலாம். தங்களுக்காக யார் வேலை செய்பவர் யார் என்று, மக்கள் தேர்வு செய்ய வேண்டும். அந்த நபருக்கு ஓட்டு போட்டு, அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். வளர்ச்சிப் பணிகள் நடப்பது முக்கியம்,'' என்றார்.
தொண்டரால் பரபரப்பு
தட்சிண கன்னடா லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பத்மராஜ், மங்களூரு கபிடானியோவில் அமைக்கப்பட்டு இருந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட்டார். பின்னர் அவர் வெளியே வந்தபோது, பா.ஜ., தொண்டரான சந்தீப் எக்கூர் என்பவர், பத்மராஜிடம் ஏதோ ஆவேசமாக பேசினார்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த இன்ஸ்பெக்டர் நாகராஜ் உள்ளிட்ட போலீசார், சந்தீப்பை சமாதானம் செய்ய முயன்றனர்.
ஆனால் போலீசாருடன், சந்தீப் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை ஊடகத்தினர் வீடியோ எடுத்தனர். அப்போது சந்தீப், ஊடகத்தினருடனும் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து அவரை, போலீசார் கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
காங்கிரஸ் வேட்பாளர் பத்மராஜ் கூறுகையில், ''மங்களூரில் இதுபோன்று பிரச்னை ஏற்பட்டது இல்லை. தோல்வி பயத்தில் ஓட்டுச்சாவடியில் பிரச்னை ஏற்படுத்த, பா.ஜ.,வினர் முயற்சி செய்கின்றனர்.
தேவையின்றி பிரச்னை செய்து, சிறைக்குச் செல்ல வேண்டாம் என்று, பா.ஜ., தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்,'' என்றார்.

