ADDED : மே 05, 2024 05:47 AM
ராய்ச்சூர்: வெப்பம் அதிகரித்துள்ளதால், ராய்ச்சூரில் 15 வயது சிறுவன் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் நடப்பாண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பல நாட்களாக வெப்பக் காற்று வீசி வருகிறது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராய்ச்சூரில் கடந்த ஒரு வாரமாக வெப்பத்தின் அளவு 45 டிகிரி செல்ஷியசாக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பம் அதிகரித்துள்ளது. இந்த வெப்பத்தால் சிறுவர் முதல் முதியவர் வரை பாதிக்கப்படுகின்றனர்.
சிந்தனுாரின் முக்குந்தா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஹுடா கிராமத்தில் வீரேஷ் மடிவாளா, 50, கங்கம்மா தேவதாசி, 60, துர்கம்மா ஹனுமந்தப்பா அப்பர், 60, ஆகியோர் நேற்று முன் தினம் துணி துவைக்க கிணற்றுக்குச் சென்றனர்.
நீண்ட நேரமாகியும் அவர்கள் வராததால், வீட்டில் உள்ளோர் பதற்றம் அடைந்தனர்.
மாலையில் அப்பகுதிக்கு சென்ற சிலர், மூன்று பேர் இறந்து கிடந்ததை பார்த்து சத்தம் போட்டனர். இதுதொடர்பாக போலீசாருக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதுபோன்று, மாற்றுத்திறனாளியான பிரதீப் திம்மண்ணா பூஜாரி என்ற 15 வயது சிறுவனும் படுக்கையில் நேற்று முன் தினம் மூச்சுப் பேச்சு இல்லாமல் காணப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ராய்ச்சூர் ஜாலிபெஞ்சி கிராமத்தை சேர்ந்த ஹனுமந்தா, 44, நேற்று கோவிலுக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு வந்தார். அதிக தாகமாக இருப்பதாக கூறி, தண்ணீர் கேட்டார். தண்ணீர் குடிக்கும்போதே அவர் சரிந்து விழுந்து உயிழந்தார்.
இதுதொடர்பாக மாவட்ட சுகாதார துறை அதிகாரி சுரேஷ் பாபு கூறுகையில், ''உயிரிழந்தவர்கள் உடல்நல குறைவாலும், நீர்ச்சத்து குறைபாட்டாலும் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பிரேத பரிசோதனைக்கு பின் தெரியவரும்,'' என்றார்.
காரில் தீ
ராய்ச்சூர் - ஹைதராபாத் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, சக்தி நகரில் உள்ள ஒய்.டி.பி.எஸ்., எதிரில் வரும்போது திடீரென காரின் முன் பகுதியில் தீப்பிடித்தது.
காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு, ஓட்டுனர் வெளியே வந்தார். தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து தீயை அணைத்தனர்.
'வரும் 8ம் தேதி வரை வெப்பம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், 'விவசாயிகள் வயலுக்கு செல்ல வேண்டாம். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்' என மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெப்பத்தின் தாக்கத்தால் ஐந்து பேர் உயிரிழந்தது, அப்பகுதியில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.