ரயில் டிரைவர்கள் பணிக்கு வரும்போது இளநீர், இருமல் மருந்து சாப்பிட தடை
ரயில் டிரைவர்கள் பணிக்கு வரும்போது இளநீர், இருமல் மருந்து சாப்பிட தடை
ADDED : பிப் 22, 2025 12:00 AM

திருவனந்தபுரம்: ரயில் இன்ஜின் டிரைவர்கள் பணிக்கு வருவதற்கு முன், இளநீர், இருமல் மருந்து, குளிர் பானங்கள், ஹோமியோபதி மருந்து உள்ளிட்ட சிலவற்றை உண்ண திருவனந்தபுரம் ரயில்வே மண்டலம் தடை விதித்துள்ளது.
ரயில் இன்ஜின் டிரைவர்கள் பணிக்கு வரும்போது, அவர்கள் மது அருந்தியுள்ளனரா என்பதை கண்டறிய, 'பிரீத் அனலைசர்' எனப்படும், சுவாச பரிசோதனை கருவி வாயிலாக சோதனை நடத்தப்படுவது வழக்கம்.
கேரளாவின், திருவனந்தபுரம் ரயில்வே மண்டலத்தில் பணியாற்றும் ரயில் இன்ஜின் டிரைவர்களிடம் சமீப நாட்களாக நடத்தப்பட்ட பிரீத் அனசைலர் சோதனையில், அவர்கள் மது அருந்தியுள்ளதாக முடிவுகள் தெரிவித்தன. அவர்களிடம் நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில், ரத்தத்தில் ஆல்கஹால் இல்லை என முடிவு தெரிவித்தது.
ஆல்கஹால் அடங்கிய ஹோமியோ மருந்துகளை உட்கொள்வதால் பிரீத் அனலைசர் முடிவு அப்படி வருவதாக சிலர் தெரிவித்தனர். சிலரோ, நாங்கள் பணிக்கு வருவதற்கு முன் பழங்கள் சாப்பிட்டோம், குளிர்பானம் அருந்தினோம் என, ஆளுக்கொரு காரணங்களை கூறினர்.
இது தொடர்கதையானதால் குழம்பிப்போன திருவனந்தபுரம் ரயில்வே மண்டல அதிகாரிகள், அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். ரயில் இன்ஜின் டிரைவர்கள் இனி பணிக்கு வருவதற்கு முன், இளநீர், குளிர்பானங்கள், சில வகை பழங்கள், வாய் புத்துணர்ச்சி திரவம், ஹோமியோபதி மற்றும் இருமல் மருந்து உள்ளிட்டவற்றை உட்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை உட்கொண்டு இருந்தால் அதை முன்கூட்டியே எழுத்துப்பூர்மாக தெரிவிக்க வேண்டும். ஆல்கஹால் கலந்த மருந்துகள் உட்கொள்பவர்கள், ரயில்வே மருத்துவ அதிகாரியிடம் இருந்து எழுத்துப்பூர்வமான அனுமதி பெற வேண்டும் என கூறியுள்ளது.
இதற்கு, இன்ஜின் டிரைவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பழுதான பிரீத் அனலைசர் கருவியை மாற்றாமல், நடைமுறைக்கு சாத்தியமில்லாத உத்தரவுகளை பிறப்பிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.