ரயில் கழிப்பறைகளில் பயணம்? 'வீடியோ'க்களுக்கு ரயில்வே மறுப்பு!
ரயில் கழிப்பறைகளில் பயணம்? 'வீடியோ'க்களுக்கு ரயில்வே மறுப்பு!
ADDED : ஏப் 22, 2024 05:57 AM

மும்பை : ரயிலின், 'ஏசி' பெட்டிகளில் முன்பதிவு டிக்கெட் இல்லாத பயணியர் அமர்ந்திருப்பது, ரயிலின் கழிப்பறைகளில் அமர்ந்து ஏராளமானோர் பயணிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, அதற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை லோகமான்ய திலகர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் சந்திப்பிற்கு தினசரி காசி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. சமீபத்தில் இந்த ரயிலின் ஏசி பெட்டியில் அத்னான் என்பவர் பயணித்தார்.
வழியில் வந்த நிறுத்தங்களில் முன்பதிவு டிக்கெட் இல்லாத பயணியரும், ஏசி பெட்டிக்குள் ஏறியதாக தெரிகிறது. இது குறித்து டிக்கெட் பரிசோதகரிடம் அவர் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டார். அதில், ஏசி பெட்டியை முன்பதிவு டிக்கெட் இல்லாத பயணியர் ஆக்கிரமித்து அமர்ந்திருப்பது, கதவுகளை திறந்து வைத்திருப்பது, கழிப்பறை செல்லும் பாதையில் அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இவற்றுக்கு மறுப்பு தெரிவித்திருந்த ரயில்வே நிர்வாகம், 'ரயில்வே துறையை களங்கப்படுத்துவது போன்ற வீடியோக்களை பதிவிட வேண்டாம். இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை' என, தெரிவித்திருந்தது.
இதையடுத்து, டிக்கெட் எடுத்திருந்தும், இடமில்லாமல் ரயிலின் கழிப்பறைகளில் பயணியர் அமர்ந்திருப்பது போன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பலரும் வெளியிட்டு, கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
மோடி தலைமையிலான மத்திய அரசு ரயில்வே துறையை பலவீனப்படுத்தி உள்ளது. இப்போது ரயில் பயணம், தண்டனையாக மாறியுள்ளது.
சாமானிய மக்களுக்கான பொதுப் பெட்டிகளை குறைத்து, வசதி படைத்தவர்கள் செல்வதற்கான பெட்டிகளே அதிகம் இயக்கப்படுகின்றன. டிக்கெட் எடுத்திருந்தும், அமர்வதற்கு இடமில்லாமல் மக்கள் கழிப்பறைகளில் அமர்ந்து பயணிக்கின்றனர். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

