தார்வாட் தொகுதியில் முக்கோண போட்டி தேசிய கட்சிகளுக்கு சவாலான சன்னியாசி
தார்வாட் தொகுதியில் முக்கோண போட்டி தேசிய கட்சிகளுக்கு சவாலான சன்னியாசி
ADDED : ஏப் 21, 2024 06:17 AM

தார்வாட்: தார்வாட் லோக்சபா தொகுதியில், முக்கோண போட்டி ஏற்பட்டுள்ளது. தேசிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சன்னியாசி ஒருவர் சவாலாக இருக்கிறார்.
தார்வாட் லோக்சபா தொகுதி, பா.ஜ.,வின் பாதுகாப்பு கோட்டை. இந்த தொகுதியை 1996 முதல் பா.ஜ., தக்க வைத்துள்ளது. தொடர்ந்து ஏழு முறை வெற்றி பெற்று, எட்டாவது முறையாக வெற்றி பெற பா.ஜ., முயற்சிக்கிறது. ஆனால் தொகுதியை தட்டிப்பறிக்க காங்கிரஸ் பல வழிகளில் முயற்சிக்கிறது.
நிலக்கரித் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறார். 2018 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோற்ற வினோத் அசூட்டி, காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
இரண்டு கட்சிகளின் வேட்பாளர்கள், தலைவர்கள் மும்முரமாக பிரசாரம் செய்கின்றனர். தார்வாட் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, எட்டு சட்டசபை தொகுதிகளில் தார்வாட், நவல்குந்த், கலகடகி, ஹூப்பள்ளி - தார்வாட் கிழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும், ஹாவேரியின் ஹூப்பள்ளி - தார்வாட் மேற்கு, சென்ட்ரல், குந்த்கோல், ஷிகாவியில் பா.ஜ., --- எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர்.
பா.ஜ., பிரமுகர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில் சிக்கி, தார்வாடில் நுழைய கூடாது என, அந்த தொகுதி எம்.எல்.ஏ., வினய் குல்கர்னிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அவரால் பிரசாரம் செய்ய முடியவில்லை.
தார்வாட் லோக்சபா தொகுதியில் லிங்காயத், முஸ்லிம் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பிரஹலாத் ஜோஷி பிராமணர். தொகுதியில் செயல்படுத்திய வளர்ச்சி திட்டங்கள், கிளீன் இமேஜ், மோடி அலையால் இம்முறையும் தனக்கே வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஜோஷி பிரசாரம் செய்கிறார்.
வினோத் அசூட்டி குருபர் சமுதாயத்தை சேர்ந்தவர். காங்., அரசு செயல்படுத்திய வாக்குறுதி திட்டங்கள், முதல்வர் சித்தராமையாவின் ஆதரவால், வெற்றி கிடைக்கும் என, நம்புகிறார்.
இதற்கிடையில் திங்களேஸ்வரா சுவாமிகள், தார்வாட் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இவர் தேசிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சவாலாக இருக்கிறார். இந்த கட்சிகளின் தோல்விகளை சுட்டி காண்பித்து, இவர் பிரசாரம் செய்கிறார்.
இதற்கு முன் தார்வாட் லோக்சபா தொகுதியில், இரண்டு கட்சிகளிடையே போட்டி இருந்தது. இப்போது மும்முனை போட்டியாக மாறியுள்ளது. ஓட்டுகள் பிரியும் என, தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் கவலையில் உள்ளனர்.

