இடமாற்றலாகி செல்லும் அன்புக்குரிய ஆசிரியைக்கு கவுரவம்
இடமாற்றலாகி செல்லும் அன்புக்குரிய ஆசிரியைக்கு கவுரவம்
ADDED : ஆக 17, 2024 11:18 PM

தார்வாட்,: கடந்த 30 ஆண்டுகள் பணியாற்றி, வேறு பள்ளிக்கு இடமாற்றலாகிச் செல்லும் ஆசிரியையை சாரட் வண்டியில், ஊர்வலமாக அழைத்துச் சென்று கிராமத்தினர் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர்.
தார்வாடின், மும்மிகட்டி அரசு தொடக்கப்பள்ளியில், உடற் பயிற்சி ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் கீதா சுரேஷ் பெடகேரி, 55.
இவர் 30 ஆண்டுகளாக இதே பள்ளியில் பணியாற்றினார். இவர் பள்ளி மாணவர்களுக்கும், கிராமத்தினருக்கும் பிடித்தமான ஆசிரியையாக இருந்தார்.
கீதா உடற்பயிற்சி ஆசிரியையாக மட்டுமின்றி, மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில், நல்ல வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். குறிப்பாக மாணவியர், தங்களின் சொந்த பிரச்னைகளை கூறி, தீர்வு கண்டனர். மாணவியருக்கு ஒரு தாயாக, தோழியாக, சகோதரியாக திகழ்ந்தவர்.
இவரிடம் கல்வி கற்ற பலரும், தற்போது நல்ல முறையில் வாழ்க்கையில் உயர்ந்துள்ளனர். 30 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணியாற்றிய இவரை, தார்வாடின் காந்தி நகர் லே - அவுட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கு அவரது வேண்டுகோளை ஏற்று அரசு இடம் மாற்றியது.
தார்வாடில் வசிக்கும் ஆசிரியை கீதா, தினமும் மும்மட்டி கிராமத்துக்கு வந்து பணியாற்றினார். இன்னும் ஐந்து ஆண்டுகள் பணிக்காலம் உள்ளது. தற்போது அவருக்கு உடல் நிலை சரியில்லை. எனவே அரசிடம் கோரிக்கை விடுத்து, நகர்ப்பகுதிக்கு இடம் மாற்றம் பெற்றுக்கொண்டார்.
தங்களின் அன்புக்குரிய ஆசிரியை, வேறு பள்ளிக்குச் செல்வதால் மாணவர்களும், ஆசிரியர்களும் வருத்தம் அடைந்தனர். அவரது உடல் நிலையை கருதி, வேறு பள்ளிக்குச் செல்வதை ஏற்றுக்கொண்டனர்.
கிராமத்தினர், மாணவ, மாணவியர் பிரிவு உபசார நிகழ்ச்சி நடத்தி, ஆசிரியையை கவுரவித்தனர். அவரை ஊர்வலமாக அழைத்து வந்து, பிரியாவிடை கொடுத்து நேற்று முன் தினம் வழியனுப்பினர். அப்போது, துக்கம் தாங்காமல், அவர்கள் கண்ணீர் சிந்தினர்.
கிராமத்தினர் கூறுகையில், 'ஆசிரியர் கீதா எங்களுக்கு, ஆசிரியையாக மட்டும் இருக்கவில்லை. எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போன்றிருந்தார். அவர் திடீரென இடமாற்றம் ஆனது வருத்தமளிக்கிறது. ஆனால் வேறு வழியில்லை. அரைமனதாக வழியனுப்பினோம்' என்றனர்.
- கீதா, ஆசிரியை

