ADDED : மே 24, 2024 12:45 AM
நந்திகிராம், மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்., - பா.ஜ.,வினர் இடையே ஏற்பட்ட மோதலில், பெண் ஒருவர் பலியானதை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. ஐந்து கட்டங்களாக ஏற்கனவே ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், தம்லுக், மேதினிபூர், பிஷ்ணுபூர் உள்ளிட்ட எட்டு தொகுதிகளுக்கு நாளை ஆறாம் கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது.
இந்நிலையில், தம்லுக் தொகுதிக்கு உட்பட்ட நந்திகிராம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வினர் இடையே மோதல் ஏற்பட்டது.
ஓட்டுப்பதிவு நடக்கவுள்ள பகுதிகளில் பா.ஜ.,வினர் பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், அங்கு வந்த திரிணமுல் காங்கிரசார், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. கூர்மையான ஆயுதங்கள் வாயிலாக நடந்த தாக்குதலில், பா.ஜ., பெண் தொண்டரான ரதிபாலா ஆரி பலியானார்; மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.
இதை கண்டித்து, நந்திபூர் மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்த பா.ஜ.,வினர் முடிவு செய்தனர். இதற்கு அனுமதி கிடைக்காத நிலையில், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நந்திகிராம் மாவட்டத்துக்கு உட்பட்ட சோனாசுரா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.,வினர், அங்குள்ள கடைகளை அடைக்கச் சொல்லி வற்புறுத்தினர். மறுத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், ஒரு சில கடைகளுக்கு அவர்கள் தீ வைத்தனர்.
காலி டயர்களை எரித்து சாலைகளில் பா.ஜ.,வினர் வீசியதை அடுத்து, அங்கு பதற்றம் நிலவியது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர். தொடர் வன்முறையை அடுத்து, நந்திகிராம் மாவட்டத்தில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.