சந்தேஷ்காலியில் சி.பி.ஐ., ரெய்டு தேர்தல் அதிகாரியிடம் திரிணமுல் புகார்
சந்தேஷ்காலியில் சி.பி.ஐ., ரெய்டு தேர்தல் அதிகாரியிடம் திரிணமுல் புகார்
ADDED : ஏப் 27, 2024 11:49 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவின் போது, சந்தேஷ்காலியில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது குறித்து, மாநில தேர்தல் அதிகாரியிடம், ஆளும் திரிணமுல் காங்., புகார் அளித்துள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தம் 42 லோக்சபா தொகுதிகள் உள்ளன.
பறிமுதல்
கடந்த 19ம் தேதி மூன்று தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்த நிலையில், டார்ஜிலிங், ராய்கஞ்ச், பலுார்காட் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது.
அப்போது, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலியில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணமுல் காங்., நிர்வாகி ஷாஜஹான் ஷேக்கின் கூட்டாளிகள் இருவரது வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், வெடி மருந்துகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல், நில அபகரிப்பு, பாலியல் பலாத்காரம், ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் மோசடி உள்ளிட்ட புகார்கள், ஷாஜஹான் ஷேக் மீது உள்ளன.
இந்நிலையில், திரிணமுல் காங்கிரசுக்கு எதிரான வெறுப்பு அலையை பரப்பவே, இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவின் போது, சி.பி.ஐ., சோதனை நடத்தியதாக, மாநில தேர்தல் அதிகாரியிடம் அக்கட்சி புகார் அளித்துள்ளது.
மாநில தேர்தல் அதிகாரிக்கு திரிணமுல் காங்., எழுதிய கடிதம்:
அவதுாறு
சந்தேஷ்காலியில் சோதனை நடத்துவதற்கு முன், அது குறித்த தகவலை மாநில காவல் துறைக்கு சி.பி.ஐ., அதிகாரிகள் வழங்கவில்லை. மேற்கு வங்க காவல் துறையில் வெடிகுண்டு செயலிழப்பு குழு உள்ள நிலையில், அவர்களது உதவியையும் அவர்கள் கேட்கவில்லை.
சோதனையின் போது கைப்பற்றப் பட்ட வெடி பொருட்கள், உண்மையிலேயே, அந்த வீடுகளில் இருந்து தான் கைப்பற்றப்பட்டனவா அல்லது சி.பி.ஐ., அதிகாரிகளே வைத்து விட்டு, கைப்பற்றியதாகக் கூறுகின்றனரா என்ற சந்தேகமும் எழுகிறது.
சி.பி.ஐ., அதிகாரிகளுடன் கைகோர்த்து, இந்த வெடி பொருட்களை பா.ஜ., வைத்திருக்கலாம் என்றும் நாங்கள் சந்தேகிக்கிறோம்.
தேர்தல் காலத்தில், திரிணமுல் காங்., மற்றும் அதன் வேட்பாளர்களுக்கு எதிராக, நாடு தழுவிய வெறுப்பை உருவாக்க, சி.பி.ஐ., முயற்சிக்கிறது. எங்கள் மீது அவதுாறு பரப்ப, சி.பி.ஐ., உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளை, பா.ஜ., ஆயுதமாக பயன்படுத்துகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.

