ADDED : ஆக 24, 2024 01:47 AM
கொப்பால்: துங்கபத்ரா அணையின் நீர்மட்டம் ஆறு நாட்களில் 12 டி.எம்.சி., உயர்ந்து இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொப்பால் அருகே முனிராபாத்தில் துங்கபத்ரா அணை உள்ளது.
இந்த அணையின் 19வது மதகின் ஷட்டரை தாங்கிப் பிடிக்கும் இரும்பு சங்கிலி கடந்த 10ம் தேதி இரவு அறுந்தது. அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரில் ஷட்டர் அடித்துச் செல்லப்பட்டது.
ஷட்டர் இல்லாத மதகில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறியது. அணையின் பாதுகாப்பு கருதி மேலும் சில மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. உடைந்த ஷட்டருக்கு பதிலாக புதிய ஷட்டர் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் 19வது மதகில் தற்காலிக ஷட்டர் கடந்த 17ம் தேதி பொருத்தப்பட்டது. இதற்கிடையே 10ம் தேதி இரவில் இருந்து 17ம் தேதி வரை, 35 டி.எம்.சி., தண்ணீர் வெளியேறியது.
இவ்வளவு தண்ணீர் வீணாக வெளியேறியதால், அணையை நம்பி பயிர் செய்ய இருக்கும் பல்லாரி, விஜயநகரா, ராய்ச்சூர், கொப்பால் ஆகிய மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்தனர்.
ஆயினும், கடந்த 17ம் தேதி இரவில் இருந்து, அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அணையின் நீர்மட்டமும் உயர ஆரம்பித்தது.
அன்றில் இருந்து நேற்று முன்தினம் வரை ஆறு நாட்களில், அணையின் நீர்மட்டம் 12 டி.எம்.சி., உயர்ந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.