ADDED : செப் 02, 2024 09:07 PM
பெங்களூரு : மதகின் ஷட்டர் உடைந்து, 25 டி.எம்.சி.,க்கும் மேலாக தண்ணீர் வீணான துங்கபத்ரா அணையில் மீண்டும் நீர்மட்டம் அதிகரிப்பதால், விரைவில் நிரம்பும் வாய்ப்புள்ளது.
கொப்பால், கங்காவதியின், முனீராபாத்தில் துங்கபத்ரா அணை உள்ளது. 105.79 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. கடந்த மூன்று மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவமழையால் அணை நிரம்பியிருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் அணையின் 19வது மதகின் ஷட்டர் உடைந்து, 25 டி.எம்.சி.,க்கும் மேலான தண்ணீர் வெளியேறியது.
உடனடி நடவடிக்கை எடுத்த அரசு, உடைந்திருந்த ஷட்டருக்கு பதிலாக புதிய ஷட்டர் பொருத்தியது. தண்ணீர் வீணானதால் அணை மீண்டும் நிரம்புமா, நிரம்பாதா என, விவசாயிகள் கவலையில் இருந்தனர். சில நாட்களாக மழை பெய்ததால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
'அணையில் தற்போது 96.84 டி.எம்.சி., நீர் இருப்புள்ளது. மழை இதேபோன்று நீடித்தால், இரண்டொரு நாட்களில் அணை நிரம்பும்' என, நீர்ப்பாசன துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.