ADDED : செப் 08, 2024 12:35 AM

சென்னையை சேர்ந்த, எல்.ஆர். இன்ப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் ரவீந்திரன்:
நான் பிறந்தது தேவகோட்டை. பள்ளிப் படிப்பை முடித்த பின், சிவில் இன்ஜினியரிங் படித்தேன். படித்து முடித்ததும் வேலை கிடைத்தது.
ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து வேலை பார்த்ததால், ஒரு கட்டடத்தை எப்படி கச்சிதமாக முடித்து தர வேண்டும் என்று கற்றுக் கொண்டேன்.
திருமணமான சில ஆண்டுகளுக்கு பின், சொந்தமாக சிவில் கன்ஸ்ட்ரக் ஷன் கம்பெனி ஒன்றை துவக்கினேன். முதலில் பங்களா ஒன்றை கட்டித்தரும் வேலை கிடைத்தது. அதை சரியாக செய்து தந்தேன்.
அதன்பின், 20,000 சதுர அடியில் இண்டஸ்ட்ரியல் பில்டிங் ஒன்றை கட்டித்தரும் வாய்ப்பு கிடைத்தது. அதையும் சிறப்பாக கட்டித் தந்தேன்.
இப்படி சென்று கொண்டிருந்த நிலையில், கவர்மென்ட் புராஜெக்ட்டுகளை எடுத்து செய்ய ஆரம்பித்தேன். அதன்பின், கெஸ்ட் ஹவுசை இன்டீரியர் செய்து தரும் வேலை வந்தது.
அதை சரியாக செய்து தந்ததில், வங்கி அலுவலகங்களில் இன்டீரியர் செய்து தரும் வேலைகள் தொடர்ந்து கிடைத்தன; இதனால் என் வேலையே இன்டீரியர் என்பதாக மாறிப் போனது.
இன்டீரியர் வேலைக்காக நான் எங்கும் தேடி அலையவில்லை. ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு துறை புதிதாக உருவாகும்.
அந்த துறையில் ஒரு ஆர்டர் கிடைத்தால் போதும்... அடுத்தடுத்து அந்த துறையில் இருந்து பல வேலைகள் வரும் என்பது நான் கண்ட அனுபவம்.
வெறும் இன்டீரியரில் துவங்கி, புராஜெக்ட் மேனேஜ்மென்ட், சிவில் ஒர்க் டிசைன் அண்டு பில்ட் சர்வீசஸ், இன்டீரியர் பர்னிசிங், எலக்ட்ரிக்கல் ஒர்க்ஸ் என, அலுவலகங்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் செய்து தரும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம்.
நான் தனியாக நிறுவனம் துவங்கியது முதலே, என் வேலைகள் அனைத்தையும் சரிபாதிக்கு மேல் பகிர்ந்து கொள்வது, என் மனைவி தான்.
தவிர என் அலுவலக ஊழியர்கள், எனக்கு பொருள் சப்ளை செய்தோர், ஒப்பந்ததாரர்கள் என அனைவரின் உதவி இல்லாமல், நான் இவ்வளவு துாரம் வளர்ந்திருக்க முடியாது.
மேலும், என், 52வது வயதில் பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எம்.,மில் சேர்ந்து படித்தேன்.
கடந்த, 25 ஆண்டுகளில் நான் செய்த, 'டர்ன் ஓவர்' 20 கோடி. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் என் நிறுவனத்தின் டர்ன் ஓவரை, 40 கோடி ரூபாயாக உயர்த்தும் அளவுக்கு முன்னேற்றம் கண்டு இருக்கிறேன்.