ADDED : மே 09, 2024 02:34 AM

பாலக்காடு:கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பரப்பனங்காடி செட்டிப்படியைச் சேர்ந்த உண்ணி - தேவி தம்பதியின் மகன் முகேஷ், 34; பாலக்காட்டில் 'மாத்ருபூமி' செய்திச் சேனலில் வீடியோகிராபராக பணியாற்றினார்.
மலம்புழா பனமரக்காடு என்ற இடத்தில் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை கூட்டம் முகாமிட்டுள்ளதாக கிடைத்த தகவலால், அங்கு செய்தி சேகரிக்க நேற்று காலை 7:00 மணிக்கு வீடியோகிராபர் முகேஷ், நிருபர் கோகுல் மற்றும் கார் டிரைவர் மனோஜ் ஆகியோர் சென்றனர்.
அங்கு, ஆற்றை கடந்து சென்ற யானைக் கூட்டத்தை, முகேஷ் வீடியோ எடுத்துள்ளார். அப்போது, திடீரென முகேஷ் உள்ளிட்டோரை காட்டு யானைகள் துரத்தியதால் மூவரும் தப்பி ஓட முயன்றனர்.
கால் தவறி விழுந்த முகேஷை யானை மிதித்தது. அங்கிருந்தோர் முகேஷை மீட்டு, பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக, புதுச்சேரி - கசபா போலீசார் விசாரிக்கின்றனர். முகேஷ் மறைவுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்தார்.