ஐஸ்கிரீமில் மது கலந்து விற்பனை தெலுங்கானாவில் இருவர் சிக்கினர்
ஐஸ்கிரீமில் மது கலந்து விற்பனை தெலுங்கானாவில் இருவர் சிக்கினர்
ADDED : செப் 08, 2024 02:21 AM

ஹைதராபாத் : தெலுங்கானாவில் மது கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதின் ஹூப்ளி ஹில் பகுதியில் அரிகோ கபே என்ற உணவு விடுதி செயல்படுகிறது.
இங்கு வெளிநாட்டவர் மற்றும் உள்ளூர்வாசிகள் அதிகம் பேர் வருகை புரிகின்றனர். இந்த கபே, ஜெலடோ வகை ஐஸ்கிரீம் விற்பனைக்கு பெயர் பெற்றது. பலரும் இந்த வகை ஐஸ்கிரீமை விரும்பி வாங்கி சாப்பிடுவர்.
இந்நிலையில், அரிகோ கபேயில் விற்கப்படும் ஜெலடோ ஐஸ்கிரீமில் மது கலக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து தெலுங்கானா மதுவிலக்கு போலீசார் இந்த கபேயில் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், ஐஸ்கிரீமில் மது கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஒரு கிலோ ஐஸ்கிரீமில், 60 மி.லி., அளவுக்கு விஸ்கி எனும் மது வகையை கலப்பதாக ஊழியர்கள் ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து மது கலந்த 11.5 கிலோ ஐஸ்கிரீமை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். கபே மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.