ADDED : மே 19, 2024 03:40 AM
கதக: வீரபத்ரேஸ்வரர் கோவில் ரத உற்சவத்தின்போது, தேரின் சக்கரத்தில் சிக்கி, இருவர் உயிரிழந்தனர்.
கதக் மாவட்டம், ரோனா நகரில் உள்ள வீரபத்ரேஸ்வரர் கோவில் உற்சவம் நடந்து வருகிறது. ரத உற்சவ தினமான நேற்று, பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இதனால் கூட்டம் அலைமோதியது.
தேரின் மீது பக்தர்கள் உலர்ந்த பேரிச்சம்பழம் வீசுவர். இதன் மூலம் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என நம்புகின்றனர்.
அதுபோன்று நேற்று தேர் மீது பேரிச்சம்பழம் வீசினர். இதை எடுக்க, தேர் சக்கரத்தின் அருகில் இருவர் முயற்சித்தனர். அப்போது பக்தர்கள், தேரை வேகமாக இழுத்தனர். இதில் இருவரும் கீழே விழுந்ததில், அவர்கள் மீது தேர் ஏறி இறங்கியது.
இறந்தவர்களில் ஒருவர், ரோனாவின் லிங்கனகவுடா, 52, என்பது தெரிய வந்துள்ளது. மற்றொருவரின் தலை மீது ஏறியதில், முகம் சிதைந்துள்ளது. அவரின் கையில் உள்ள பச்சை குத்தப்பட்டதை வைத்து ரோனா போலீசார் விசாரிக்கின்றனர்.
மகிழ்ச்சியாக துவங்கிய தேர் திருவிழாவில், இருவர் பலியானதால், அப்பகுதி முழுதும் சோகமாக காட்சியளித்தது.
இதுபோன்று சில நாட்களுக்கு முன்பு விஜயபுராவில் நடந்த தேர்த்திருவிழாவில், தேர் சக்கரம் ஏறியதில் மூன்று பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

