ADDED : ஜூன் 27, 2024 12:06 AM

புனே: மஹாராஷ்டிராவின் புனேவில் டாக்டர் மற்றும் அவரது மகளுக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், புனேவின் எரண்ட்வானே பகுதியைச் சேர்ந்த 46 வயதுள்ள மருத்துவருக்கு சமீபத்தில் காய்ச்சல் ஏற்பட்டது. அவரது உடலில் தடிப்புகள் தென்பட்டன. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது ரத்த மாதிரி ஆய்வுக்காக புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
டெங்கு மற்றும் சிக்குன் குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும், ஏடிஸ் வகை கொசு வாயிலாகவே இந்த ஜிகா வைரஸ் பரவுகிறது.
இதுகுறித்து புனே மாநகராட்சி சுகாதார அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டாக்டருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதியான பின், அவரது குடும்பத்தில் உள்ள மற்ற ஐந்து பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் அவரது 15 வயது மகளுக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, புனே மாநகராட்சியின் சுகாதாரத் துறை, மருத்துவமனைகளில் கண்காணிப்பை துவங்கியுள்ளது. கொசுக்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகளின் உடல்நிலையை கண்காணிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணி ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டால், அவரது கருவில் உள்ள குழந்தைக்கு மைக்ரோசெபாலி எனும் மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.