ஹவுரா - மும்பை ரயில் தடம் புரண்டு இரண்டு பேர் பலி; 20 பேர் காயம்
ஹவுரா - மும்பை ரயில் தடம் புரண்டு இரண்டு பேர் பலி; 20 பேர் காயம்
ADDED : ஜூலை 31, 2024 01:48 AM

ராஞ்சி,ஜார்க்கண்டில் விரைவு ரயில் தடம் புரண்டதில், இரண்டு பயணியர் பலியாகினர்; 20 பேர் காயமடைந்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுராவில் இருந்து மஹாராஷ்டிராவின் மும்பைக்கு நேற்று முன்தினம் இரவு, 22 பெட்டிகளுடன் விரைவு ரயில் புறப்பட்டது.
இது, ஜார்க்கண்டின் சக்கரதாபூர் அருகே உள்ள பாராபாம்பூ இடத்தின் அருகே, நேற்று அதிகாலை, 3:45 மணிக்கு சென்ற போது, அருகே உள்ள வழித்தடத்தில் சரக்கு ரயிலின் ஒரு பெட்டி ஒன்று கவிழ்ந்திருந்தது.
ரூ.10 லட்சம் இழப்பீடு
அப்போது, அவ்வழித்தடத்தில் சென்ற விரைவு ரயில், சரக்கு ரயிலின் பெட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், 16 பயணியர் பெட்டிகள் உட்பட 18 ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின. அப்போது, ரயிலில் சிக்கிய பயணியரின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், ரயில் பெட்டிகளுக்கு இடையே சிக்கியவர்களை மீட்டனர்; இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் 20 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து அறிய, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் தலைமையில், குழு அமைக்கப்பட்டு உள்ளது. ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
படுகாயமடைந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் அளிக்கப்படும் எனவும், ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கேள்வி
விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்தவர்கள், மாற்று ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து நிகழ்ந்த வழித்தடத்தில், சில விரைவு மற்றும் பயணியர் ரயில்கள், ரத்து செய்யப்பட்டன. இதேபோல், சில ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.
அடுத்தடுத்து ரயில் விபத்துகள் அரங்கேறி வருவதற்கு, காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், இந்த ரயில் விபத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது சமூக வலைதள பதிவில், 'வாரந்தோறும் ரயில் விபத்து நடந்து வருகிறது. இதில் பலர் பலியாகி வருகின்றனர். இதை எத்தனை நாட்களுக்கு பொறுத்துக் கொள்ள வேண்டும்? இதற்கு ஒரு முடிவே இல்லையா?' என, கேள்வி எழுப்பியுள்ளார்.