ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு இலங்கையில் மேலும் இருவர் கைது
ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு இலங்கையில் மேலும் இருவர் கைது
ADDED : மே 30, 2024 12:42 AM
கொழும்பு :இலங்கையில், தடை செய்யப்பட்ட ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவரை, அந்நாட்டு போலீசார் நேற்று கைது செய்தனர்.
குஜராத்தின் ஆமதாபாத் விமான நிலையத்துக்கு, 'இண்டிகோ' விமானத்தில் சமீபத்தில் வந்த நான்கு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர்களுக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்., உடன் தொடர்பு இருப்பதும், நான்கு பேரும் நம் அண்டை நாடான இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.
நம் உள்துறை அமைச்சகம் அளித்த தகவலின் அடிப்படையில், கைது செய்யப்பட்டோரின் பின்னணி குறித்து, இலங்கை போலீசாரும் தனியாக விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், கொழும்பில் உள்ள மாளிகாவத்தை என்ற இடத்தில், இந்தியாவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் கூட்டாளி ஒருவரை, போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு இருந்ததாகக் கூறி, மேலும் இருவரை இலங்கை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதற்கிடையே, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு வர உதவிய, இலங்கையின் டெமடகோடா பகுதியைச் சேர்ந்த ஒஸ்மாண்டு கெரார்டு, 46, என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அவரை பற்றி தகவல் கொடுப்போருக்கு, 20 லட்சம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.