விளம்பர பலகை சரிந்த விபத்தில் மேலும் இரு உடல்கள் மீட்பு
விளம்பர பலகை சரிந்த விபத்தில் மேலும் இரு உடல்கள் மீட்பு
ADDED : மே 16, 2024 12:11 AM

மும்பை : மஹாராஷ்டிராவின் மும்பையில் விளம்பர பலகை சரிந்து விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இரண்டு உடல்கள் நேற்று மீட்கப்பட்டன.
மஹாராஷ்டிராவின் மும்பையில் கடந்த 13ம் தேதி மாலை சூறாவளிக் காற்று வீசியது. அப்போது, காட்கோபர் பகுதியின் சேதா நகர் என்னும் இடத்தில் பெட்ரோல் பங்கை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த 120 அடி உயரம், 120 அடி அகலம் உடைய பிரமாண்ட விளம்பர பலகை சரிந்து விழுந்தது.
பலகையை தாங்கி பிடித்த இரும்பு கம்பிகள், சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விழுந்தன. இந்த விபத்தில், 100க்கும் மேற்பட்டோர் விளம்பர பலகையின் அடியில் சிக்கிக் கொண்டனர்.
பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 89 பேர் மீட்கப்பட்டனர். இதில், 14 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 70க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக, 40 மணி நேரத்துக்கும் மேலாக மீட்புப்பணி தொடரும் நிலையில், மேலும் இருவரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.