ADDED : மே 03, 2024 10:58 PM

ஹாசன் : வறண்ட ஏரியில் இறந்து மிதந்த மீன்களை சமைத்து சாப்பிட்ட இருவர் உயிரிழந்தனர்; 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கர்நாடகா வரலாற்றில் நடப்பாண்டு கடுமையான வெப்பம் வாட்டி வதைக்கிறது. அணைகளில் தண்ணீர் அளவு குறைந்து வருகிறது. ஏரிகள், குட்டைகள் வறண்டு வருகின்றன.
இந்நிலையில், ஹாசன் மாவட்டம், அரகலகூடின் பசவஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் புட்டம்மா, 50. நேற்று முன்தினம் ஏரியில் இருந்து மீன் பிடித்து வருவதாக தனது தாயிடம் கூறிவிட்டுச் சென்றார்.
கடுமையான வெப்பம் காரணமாக, ஏரியில் தண்ணீர் இன்றி இறந்து கிடந்த மீன்களை வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார். இதுபோன்று இக்கிராமத்தை சேர்ந்த பலரும் மீன்களை எடுத்து வந்து சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
சிறிது நேரத்தில் மீன் சாப்பிட்ட பலருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் புட்டம்மா, ரவிகுமார், 46, ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தனர். 15க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் சத்யபாமா, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருவோரிடம் நலம் விசாரித்தார். அரகலகூடு போலீசார் விசாரிக்கின்றனர்.