கர்ப்பிணி மகளை எரித்து கொன்ற தந்தை உட்பட இருவருக்கு துாக்கு
கர்ப்பிணி மகளை எரித்து கொன்ற தந்தை உட்பட இருவருக்கு துாக்கு
ADDED : மே 04, 2024 10:54 PM
விஜயபுரா: கர்ப்பிணியை தீவைத்து எரித்து ஆணவ கொலை செய்த இருவருக்கு துாக்கு தண்டனையும், ஐவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து, விஜயபுரா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விஜயபுரா மாவட்டம், முத்தேபிஹாளின் குன்டகனாளா கிராமத்தில் வசிக்கும் ரமஜானபி மகள் பானு பேகம் அத்தாரா, 26.
இவர் அதே கிராமத்தை சேர்ந்த சாயிபன்னா கொன்னுரா, 28, என்பவரை காதலித்தார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி, 2017ல் அவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதி வேறு நகருக்கு சென்று வாழ்க்கை நடத்தினர்.
கர்ப்பமடைந்த பானுபேகம், பிரசவத்துக்காக கணவரின் வீட்டுக்கு வந்திருந்தார். வேறு ஜாதி இளைஞரை திருமணம் செய்து கொண்டதால், ஏற்கனவே கோபத்தில் இருந்து பானுபேகத்தின் குடும்பத்தினர், மகள், கணவர் வீட்டுக்கு வந்ததை அறிந்து எரிச்சல் அடைந்தனர்.
மகளையும், அவரது கணவர் சாயபண்ணா கொன்னுராவையும் கொலை செய்ய சதி செய்தனர். சரியான நேரம் பார்த்து காத்திருந்தனர்.
தனியாக சிக்கிய பானுபேகமை நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் தாக்கினர். மயங்கி விழுந்த அவரை மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்துக் கொலை செய்தனர்.
இதுகுறித்து, சாயிபன்னா அளித்த புகாரின்படி, பானுவின் தந்தை இப்ராகிம் சாபா முகமது சாப் அத்தாரா, தாய் ரமஜானபி அத்தாரா, உறவினர்கள் அக்பர் முகமது சாபா அத்தாரா, தாவலபி பந்தேனவாஜ் ஜமாதார், அஜமா ஜிலானி தக்னி, ஜிலானி அப்துல் காதர் தக்னி, தாவலபி சுபான் தன்னுரா ஆகியோரை, தாளிகோட்டே போலீசார் கைது செய்தனர்.
விசாரணையை முடித்து, விஜயபுராவின் இரண்டாவது மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் இவர்களின் குற்றம் உறுதியானதால், இப்ராகிம் சாபா, அக்பர் முகமது சாபா அத்தார் ஆகிய இருவருக்கு துாக்கு தண்டனையும், மற்ற ஐவருக்கு ஆயுள் தண்டனையும், 4.19 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிமன்றம் நேற்று முன் தினம் மாலை தீர்ப்பளித்தது.