ADDED : ஆக 17, 2024 10:56 PM
பைட்ராயனபுரா: பைட்ராயனபுராவில் லாரியில் 'ஹேண்டு பிரேக்' போடாததால், இறக்கத்தில் சென்ற லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், 14 வயது சிறுமி உட்பட இருவர் பலியாகினர்.
பைட்ராயணபுரா ஹொசகுட்டதஹள்ளியில் வீடு ஒன்று கட்டுவதற்காக 'ஹாலோ பிரிக்ஸ்' ஏற்றிய லாரி ஒன்று நின்றிருந்தது. லாரி ஓட்டுனர், 'ஹேண்டு பிரேக்' போடாமல் விட்டுள்ளார். சாலை சற்று சாய்வாக இருந்ததால், லாரி மெல்ல நகர்ந்தது.
லாரி நகர்வதை பார்த்த லாரி ஓட்டுனர் சுரேஷ், லாரியில் ஏற முயற்சித்தார். அதற்குள் வேகமாக செல்ல துவங்கிய லாரி, எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
அதில் இருந்து இருவரும் கீழே விழுந்ததில், அவர்கள் மீது லாரி ஏறி, 150 முதல் 200 மீட்டர் துாரம் இழுத்துச் சென்றது.
அத்துடன் சாலை ஓரத்தில் இருந்து இரு சக்கர வாகனங்கள், இரண்டு கார்கள் மீது மோதி லாரி நின்றது. லாரியின் டயரில் சிக்கி உயிரிழந்தவர்கள், அச்சாலையில் வசித்து வந்த ஷாஹிப் ராஜா, 21, ரெஹான் ராஜா, 14, என்பது தெரிய வந்தது.
விபத்தை பார்த்த லாரி ஓட்டுனர் சுரேஷ், அங்கிருந்து தப்பி, பைட்ராயனபுரா போக்குவரத்து போலீசில் சரணடைந்தார். போலீசார் விசாரிக்கின்றர்.
லாரியின் அடியில் இரு சக்கர வாகனம் சிக்கியதால் தான், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என அப்பகுதியினர் தெரிவித்தனர்.

