ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் சதியை முறியடித்து வென்ற பா.ஜ., தலைவர்கள்
ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் சதியை முறியடித்து வென்ற பா.ஜ., தலைவர்கள்
ADDED : ஜூன் 10, 2024 04:53 AM

விஜயபுரா : முன்னாள் முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே பாசறையில், அரசியல் பயின்று வந்த விஜயபுரா மாவட்டத்தின் இரண்டு தலித் தலைவர்கள், பா.ஜ., சார்பில் இம்முறை வெவ்வேறு தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
லோக்சபா தேர்தலில், விஜயபுரா தொகுதியில் போட்டியிட்ட ரமேஷ் ஜிகஜினகி, சித்ரதுர்கா தொகுதியில் போட்டியிட்ட கோவிந்த் கார்ஜோள் வெற்றி பெற்று, எம்.பி.,யாகின்றனர். இதன் மூலம் தங்களின் சொந்த தொகுதிக்கும், சமுதாயத்துக்கும் அரசியல் ரீதியில் பலத்தை அதிகரித்துள்ளனர்.
துாரத்து உறவினர்கள்
எஸ்.சி., பிரிவின் மாதிக சமுதாயத்தை சேர்ந்த கோவிந்த் கார்ஜோள், 73, ரமேஷ் ஜிகஜினகி இருவரும் துாரத்து உறவினர்கள். ஜனதா பரிவாரில் அரசியல் ரீதியில் வளர்ந்தவர்கள்.
கோவிந்த் கார்ஜோள், விஜயபுராவின் கார்ஜோள் கிராமத்தை சேர்ந்தவர் என்றாலும், அரசியல் ரீதியில் வளர்ந்தது பாகல்கோட் மாவட்டத்தில். ஆரம்ப நாட்களில் அரசு ஊழியராக இருந்த இவர், விருப்ப ஓய்வு பெற்று, முதோல் சட்டசபை தொகுதியில் ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாகவும், மூன்று முறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். ஒரு முறை துணை முதல்வராகவும் பணியாற்றினார். தற்போது தொலைவில் உள்ள, சித்ரதுர்கா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளார்.
ராமகிருஷ்ண ஹெக்டே
ரமேஷ் ஜிகஜினகி, 71, விஜயபுரா, இன்டியின், அதர்கா கிராமத்தை சேர்ந்தவர். போலீஸ் அதிகாரியாக விரும்பிய இவர், ராமகிருஷ்ண ஹெக்டேவுடன் ஏற்பட்ட நட்பால், அரசியல்வாதி ஆனார். பள்ளொள்ளி சட்டசபை தொகுதியில், மூன்று முறை எம்.எல்.ஏ.,வானார்; பா.ஜ., மாநில அரசில் அமைச்சராகவும் இருந்தார்.
சிக்கோடி லோக்சபா தொகுதியில், மூன்று முறை எம்.பி.,யானார். அதன்பின் விஜயபுரா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒரு முறை மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார்.
ரமேஷ் ஜிகஜினகி, கோவிந்த் கார்ஜோள் ஒரே நாணயத்தின், இரண்டு பக்கங்களை போன்றவர்கள். ஓருயிர் ஈருடல் என்றும் கூறலாம். இம்முறை விஜயபுராவில், ரமேஷ் ஜிகஜினகி, சித்ரதுர்காவில் கோவிந்த் கார்ஜோள் வெற்றி பெற்றுள்ளனர்.
இவ்விரு மாவட்டங்களில், பிரபலமான சமுதாயங்களுக்கு இடையே போராடி, குறிப்பாக உள்குத்து வேலைகளுக்கு இடையே, தலித் சமுதாயத்தின் இரண்டு தலைவர்கள் வெற்றி பெற்றனர்.
இருவரையும் அரசியல் ரீதியில் ஒழித்து கட்ட, பலர் சதிவேலைகளை செய்தனர். இதை எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெற்றனர். இவர்கள் எந்த சமுதாயத்தினரையும் பகைத்து கொள்ளவில்லை. செல்வாக்கான சமுதாயத்தினரின் நம்பிக்கையை பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

