ADDED : பிப் 24, 2025 05:09 AM
மாண்டியா: மாண்டியா, நாகமங்களாவின் கம்பதஹள்ளி கிராமத்தில் ஜெயின் பசதி பள்ளி உள்ளது. இதில் படிக்கும் மாணவர்கள், சமூக பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். நேற்று காலை கம்பதஹள்ளி கிராமத்தின் ஆஞ்சனேயர் மலையில் உள்ள கோவிலை, துப்புரவு செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அங்கிருந்த குப்பை குவியலை கையில் அள்ளிய போது, அதில் இருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் பார்த்தா, 15, ஹரியந்த் பாட்டீல், 15, ஆகியோர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பள்ளி விடுமுறை நாட்களில், இவர்கள் கோவிலை சுத்தப்படுத்துவது உட்பட, பல்வேறு சமூக பணிகளில் ஈடுபடுவது வழக்கம். நேற்று ஞாயிறு என்பதால், மலைக்கோவிலை சுத்தம் செய்ய சென்றிருந்தனர். அப்போது இச்சம்பவம் நடந்துள்ளது.
கோவில் பகுதியில் நடமாடும் காட்டுப்பன்றிகளை வேட்டையாட, நாட்டு வெடிகுண்டை வைத்திருக்கலாம் என, கருதப்படுகிறது. பின்டிகனவிலே போலீசார் விசாரிக்கின்றனர்.

