ஊரை காக்கும் உச்சங்கெம்மா அம்மன் அமாவாசையில் அலைமோதும் கூட்டம்
ஊரை காக்கும் உச்சங்கெம்மா அம்மன் அமாவாசையில் அலைமோதும் கூட்டம்
ADDED : ஜூலை 23, 2024 05:57 AM

விஜயநகரா மாவட்டம், ஹரப்பனஹள்ளி தாலுகா, உச்சங்கிதுர்கா என்ற புராதன கிராமத்தில் உச்சங்கெம்மா என்ற அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஹரப்பனஹள்ளியில் இருந்தும், தாவணகெரேவில் இருந்தும் 29 கி.மீ., துாரத்தில் உள்ளது.
இந்த கிராமத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். உச்சங்கிதுர்கா கிராமத்தை, சித்ரதுர்காவின் மதகரி நாயக்கர் குறுநில மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.
வரலாறு
அவர்கள் ஆட்சிக் காலத்தில் தான் உச்சங்கெம்மா கோவில் கட்டப்பட்டது. முன்னதாக, பல்லவர்கள், கதம்பர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள் ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகிறது. நவராத்திரி நாட்களில் இங்கு நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
அப்போது, விஜயநகரா மட்டுமின்றி பல்லாரி, தாவணகெரே, சித்ரதுர்கா உட்பட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பலரும் தங்கள் விருப்பங்களை வேண்டிக் கொண்டு, நிறைவேறுவதாக நம்புகின்றனர்.
இதனாலேயே அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். ஒவ்வொரு அமாவாசை நாளன்றும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதற்காக பிரார்த்தனை செய்து வழிபடுவர்.
உச்சங்கிதுர்கா மலை மீதுள்ள கோட்டையில், இந்த கோவில் அமைந்துள்ளது. அம்மன் வடிவம் போன்று மலை அமைந்திருப்பதால் 'ஆதிசக்தி' என்று பக்தர்களால் அழைக்கப்படுவதுண்டு. மலைக்கு அந்த பக்கம் தாவணகெரே, இந்த பக்கம் விஜயநகரா என இரண்டு மாவட்டங்களையும் காண முடியும்.
யுகாதி பண்டிகை
இங்கு நடக்கும் யுகாதி பண்டிகைக்கு பல ஆண்டுகள் வரலாறு உண்டு என்று சொல்லப்படுகிறது.
அந்த காலம் முதல், இப்போது வரை யுகாதி அன்று, மலை மீது அமர்ந்திருக்கும் அம்மனை, மலையின் கீழே கொண்டு வந்து, அங்குள்ள மன்னர் வம்சத்தினரிடம் தேங்காய் கேட்கும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
அதன்பின், ஓகளி குளத்தில், அம்மனுக்கு புனித ஸ்தானம் செய்யப்படும்.
மலை மீதிருந்து ஊரை காக்கும் இஷ்ட தெய்வமாகவும், வேண்டிய வரத்தை கொடுக்கும் அம்மனாகவும் கருதி இப்பகுதி மக்கள் வழிபடுவது சிறப்பு.
மலை மீது ஏறி தரிசனம் செய்ய வேண்டும் என்பதால், வார இறுதி நாட்களில் பக்தர்களும், சுற்றுலா பயணியரையும் அதிகமாக காணலாம்.
கோவில் வளர்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று பக்தர்கள் விரும்புகின்றனர்.
ரயில், பஸ் வசதியும் உண்டு. சொந்த வாகனத்தில் செல்வதால், அருகில் உள்ள மற்ற கோவில்களையும் தரிசிக்க முடியும்
.- நமது நிருபர் -