பெங்., மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக உமாசங்கர் நியமனம்
பெங்., மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக உமாசங்கர் நியமனம்
ADDED : ஜூன் 12, 2024 06:11 PM

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் நியமிக்கப்பட்டார்.
பெங்களூரு மாநகராட்சிக்கு, 2020ல் இருந்து தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் நிர்வாகத்தை கவனிப்பதற்காக, அரசு தரப்பில் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கவுரவ் குப்தா, 2020ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியமிக்கப்பட்டார். பின், நகர வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலராக பொறுப்பேற்ற ராகேஷ்சிங், 2021ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல், நிர்வாக அதிகாரியாக பதவி வகித்து வந்தார்.
இவர், கடந்த மே 31ம் தேதி, பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அடுத்து யாரை நியமிக்கலாம் என்று முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். அதன்படி, தற்போது நகர வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலராக இருக்கும் உமாசங்கர், பெங்., மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர், 1993ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.
நியமன அறிவிப்பு வெளியான உடனே, மாநகராட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்று, பொறுப்பேற்று கொண்டார். தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத் உட்பட அனைத்து மண்டல கமிஷனர்களும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.