ADDED : ஜூன் 12, 2024 02:42 AM
புதுடில்லி:தலைநகரில் நேற்று பிற்பகலில் திடீர் மின் தடை ஏற்பட்டது. உ.பி., மின் நிலையம் செயலிழந்ததே இதற்கு காரணமென, மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
டில்லியின் பல பகுதிகளில் மதியம் 2:11 மணி முதல் மின்தடை ஏற்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மத்திய டில்லி பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே வெயிலால் புழுக்கத்தில் தவித்து வந்த நகர மக்களுக்கு மின்தடை பெரும் சுமையாக இருந்தது. ஏ.சி., இல்லாமல் கடும் அவதிப்பட்டனர்.
இந்த மின் தடைக்கு உத்தர பிரதேசத்தின் மண்டோலாவில் உள்ள பவர் கிரிட் கார்ப்பரேஷன் கட்டுப்பாட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தான் காரணமென, மாநில அமைச்சர் ஆதிஷி கூறினார்.
இதுதொடர்பாக, தன்னுடைய அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் நகரில் மின் தடை ஏற்பட்டுள்ளது. மண்டோலாவில் இருந்து 1,200 மெகாவாட் மின்சாரத்தை டில்லி பெறுகிறது. தீ விபத்து காரணமாக மொத்தமாக மின் தடை ஏற்பட்டுள்ளது.
இதை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. படிப்படியாக பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் துவங்கும். இது போன்ற நிலை மீண்டும் நிகழாமல் இருக்க மத்திய மின்துறை அமைச்சர் மற்றும் பி.ஜி.சி.ஐ.எல்., தலைவர் ஆகியோரை சந்தித்து முறையிடுவேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.