அங்கீகாரம் இல்லாத துணை முதல்வர் பதவி முதல்வர் ஆலோசகர் அதிரடி
அங்கீகாரம் இல்லாத துணை முதல்வர் பதவி முதல்வர் ஆலோசகர் அதிரடி
ADDED : ஜூலை 02, 2024 06:35 AM

கலபுரகி: ''துணை முதல்வர் பதவி என்பது வெறும் கவுர பதவி மட்டுமே. அது அதிகாரப்பூர்வமான அதிகார பதவி கிடையாது, அங்கீகாரமும் கிடையாது,'' என, முதல்வரின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி தெரிவித்தார்.
கர்நாடகாவில் துணை முதல்வராக இருப்பவர் சிவகுமார். இவரது அதிகாரத்தை குறைக்கும் வகையில், கூடுதல் துணை முதல்வர் பதவிகள் உருவாக்குவதற்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சலசலப்பு
கடந்த ஆறு மாதங்களாக இந்த விவாதம், அக்கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தல் முடிந்த பின், அது பற்றி பேசுவோம் என்று கட்சி மேலிடம் தெளிவாக கூறியிருந்தது.
தற்போது, தேர்தல் முடிந்துள்ள நிலையில், கூடுதல் துணை முதல்வர்கள் விஷயம் மீண்டும் தலை துாக்கி உள்ளது. இதற்கிடையில், முதல்வர் பதவியை, சிவகுமாருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று சந்திரசேகர சுவாமிகள் கூறியதும் சலசலப்பை ஏற்படுத்தியது.
முதல்வரின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி, கலபுரகியில் நேற்று கூறியதாவது:
முதல்வர் மாற்றம் குறித்து, சந்திரசேகர சுவாமிகள் பேசியது சரியில்லை. முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கும்படி கூறுவதற்கு, அவர் என்ன எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.,வா அல்லது கட்சியின் தலைவரா?
ஆன்மிக தலைவர்கள், தர்மத்தை போதிக்க வேண்டும். இல்லை என்றால், அவர்கள் மீதான கவுரவம் குறையும். முதல்வர் சித்தராமையா, சிறப்பான முறையில் நிர்வாகம் செய்கிறார். அவரை, முதல்வர் பதவியில் இருந்து இறக்கக் கூடாது.
மக்கள் புத்திசாலி
இன்னும் நான்கு ஆண்டுகளும், அவரே முதல்வராக இருந்தால் தான், மாநிலத்துக்கு நல்லது நடக்கும். சமூகத்தில் என்ன பேசினாலும், முதல்வர் பதவியில் இருந்து, சித்தராமையாவை இறக்க முடியாது.
வெவ்வேறு ஜாதியை சேர்ந்த தலைவர்களுக்கு, துணை முதல்வர் பதவி தரும்படி கேட்பது தவறு. இதுகுறித்து, பொது இடங்களில் விவாதிப்பது சரியில்லை. ஜாதிவாரியாக துணை முதல்வர் பதவி தந்தால், எங்களுக்கு மக்கள் ஓட்டுப் போடுவார்களா?
ஆனால், மக்கள் புத்திசாலிகள். தமக்கு தேவையானோரை தேர்வு செய்கின்றனர். துணை முதல்வர் பதவி என்பது வெறும் கவுரவத்துக்குரிய பதவி மட்டுமே. அது அதிகாரப்பூர்வமான அதிகார பதவி கிடையாது. அங்கீகாரமும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.