பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள்; போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிப்பு
பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள்; போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிப்பு
ADDED : செப் 03, 2024 10:32 PM

பெங்களூரு : பெங்களூரின் என்.ஆர்., காலனி பஸ் நிறுத்தத்தில் இருந்து நெட்டகல்லப்பா சதுக்கம் வரை, பாதாள சாக்கடைப் பணியால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
பெங்களூரு மாநகராட்சியின் சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், நகரில் உள்ள பல்வேறு சாலைகளை, கான்கிரீட் சாலைகளாக மாற்றும் பணி நடக்கிறது.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் பசவனகுடியின் என்.ஆர்., காலனி பஸ் நிறுத்தத்தில் இருந்து நெட்டகல்லப்பா சதுக்கம் வரை, சாலை அமைக்கும் பணிகள், பூமிக்கு அடியில் பாதாள சாக்கடை பணிகள் ஆகியவை நடக்கின்றன.
இருபுறம் வேலை
பொதுவாக நகரில் எந்த சாலையில் பணிகள் நடந்தாலும், சாலையின் ஒரு பக்கம் வேலை நடக்கும். இன்னொரு பக்கம் வாகனங்கள் செல்ல வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு இருக்கும்.
ஆனால் என்.ஆர்., காலனி பஸ் நிறுத்தம் - நெட்டகல்லப்பா சதுக்கம் வரை, சாலையின் இருபுறமும் பணிகள் நடக்கின்றன.
சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதால், வாகனங்களில் செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சில இடங்களில் வீடுகள் முன்பு பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதால், அந்த வீடுகளில் குடியிருப்பவர்கள், தங்கள் வாகனங்களை வெளியே கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது, போக்குவரத்து போலீசார் வருவது இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.
இதுகுறித்து பசவனகுடி போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'சாலைப் பணிகள் நடக்கும்போது மக்களுக்கு சிரமம் ஏற்படுவது வழக்கம். போக்குவரத்து பிரச்னை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கிறோம்.
வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றாலும், சிறிது நேரத்தில் நகர்ந்து சென்று விடுகின்றன. மாநகராட்சி வேலை செய்கிறது. ஒரு பக்கம் மட்டும் வேலை செய்யுங்கள் என்று, நாங்கள் அவர்களிடம் சொல்ல முடியாது' என்றனர்.
மாநகராட்சியின் தெற்கு சாலைப் பிரிவு இன்ஜினியர் தரணேந்தரகுமார் கூறுகையில், ''பூமிக்கு அடியில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் நடக்கின்றன. இந்த பணியை முடிக்க அதிக நாட்கள் எடுக்கும். சாலையின் இருபக்கம் தனித்தனியாக பணிகள் மேற்கொண்டால், போக்குவரத்து பிரச்னை இன்னும் அதிகரிக்கும்.
தடுப்பு நடவடிக்கை
''ஒரே நேரத்தில் பணிகளை முடிக்க முடிவு செய்து உள்ளோம். பணிகள் வேகமாக நடக்கின்றன. போக்குவரத்து நெரிசல் பிரச்னையை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.