ADDED : மே 08, 2024 12:59 AM

புதுடில்லி:நாட்டின் பொம்மைகள் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில் 1,264 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக, பொருளாதார சிந்தனைக்குழுவான ஜி.டி.ஆர்.ஐ., தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜி.டி.ஆர்.ஐ., எனப்படும் உலக வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி நிறுவனத்தின் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
உள்நாட்டு பொம்மை தொழில்துறையை மேம்படுத்துவதையும், பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு, இந்தியாவில் பொம்மைகள் ஏற்றுமதிக்கு, கட்டாய தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக இந்த உத்தரவுகள் பொம்மை ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்கவில்லை.
கடந்த 2020 முதல் 2022ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில், பொம்மைகள் ஏற்றுமதி 1,076 கோடியில் இருந்து 1,469 கோடி ரூபாயாக உயர்ந்திருந்தது.
இருப்பினும், கடந்த நிதியாண்டில் 1,264 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
அதேசமயம், இறக்குமதி, முந்தைய நிதியாண்டான 2022 - 23ல், 518 கோடி ரூபாயில் இருந்து, கடந்த 2023 - 24ம் நிதியாண்டில் 539 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
உலகளாவிய பொம்மை சந்தைகான ஏற்றுமதியில், சீனா 80 சதவீத பங்களிப்புடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியா ஏற்றுமதியில் 27வது இடத்திலும், இறக்குமதியில் 61வது இடத்திலும் உள்ளது.
செலவுகளை குறைக்கவும், செயல்திறனை அதிகரிக்கவும், பாரம்பரிய இந்திய பொம்மைகளை நவீனமயமாக்க வேண்டும். மேலும், அவற்றின் கலாசார மதிப்பை பாதுகாப்பதற்கும், தனித்துவமான தயாரிப்புகளை உருவாக்குவதற்கும் சிறப்பு பொம்மை உற்பத்தி மையங்களை அரசு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜி.டி.ஆர்.ஐ., நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:
சீனாவில் இருந்து வரும் தரமற்ற பொம்மை இறக்குமதியை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு பொம்மை தொழிலை வலுப்படுத்தவும், இந்தியா கடந்த 2020ம் ஆண்டு முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆனால், இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க இது உதவவில்லை. ஆகையால், இந்திய தொழில் வளர்ச்சிக்கு இன்னும் விரிவான அணுகுமுறைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

