ஆர்வம் காட்டாத ஒப்பந்ததாரர்கள்; 'டபுள் டெக்கர்' பஸ் 'டவுட்' தான்!
ஆர்வம் காட்டாத ஒப்பந்ததாரர்கள்; 'டபுள் டெக்கர்' பஸ் 'டவுட்' தான்!
ADDED : ஆக 30, 2024 09:49 PM
பெங்களூரு : 'டபுள் டெக்கர்' பஸ்சில் பயணிக்க வேண்டும் என்ற பெங்களூரு மக்களின் ஆசை நிறைவேறுவது சந்தேகம். ஏனென்றால் பஸ்களை பராமரிக்க, ஒப்பந்ததாரர்கள் ஆர்வம் காண்பிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் 1997ம் ஆண்டுக்கு முன், பி.எம்.டி.சி.,யின் டபுள் டெக்கர் பஸ்கள் இயங்கின. சிவாஜிநகர் பஸ் நிலையத்தில் இருந்து, பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டன. இதில் மக்கள் விரும்பி பயணித்தனர். நிர்வகிப்பு பிரச்னை, செலவு அதிகரித்ததால் 1997ல் இந்த பஸ்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தற்போது பெங்களூரு வளர்ச்சி அடைந்துள்ளது; மக்கள் தொகையும் அதிகரித்துள்ளது. நகருக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. எனவே மீண்டும் டபுள் டெக்கர் பஸ்களை இயக்க, பி.எம்.டி.சி., ஆர்வம் காட்டியது. இது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரித்து, 2023ல் மாநில அரசின் அனுமதிக்காக அனுப்பியது.
சுற்றுலா தலங்கள் உள்ள, நகரின் பத்து வழித்தடங்களில், டபுள் டெக்கர் பஸ்களை இயக்குவது, பி.எம்.டி.சி.,யின் எண்ணமாக இருந்தது. தேசிய துாய்மை காற்று திட்டம், நகர நில போக்குவரத்து இயக்குனரகம் திட்டத்தின் கீழ், தலா ஐந்து ஏசி டபுள் டெக்கர் பஸ்களை இயக்க திட்டமிட்டது. மக்களும் பல ஆண்டுகளுக்கு பின், இந்த பஸ்சில் பயணிக்கும் ஆசை துளிர்விட்டது. ஆனால் இந்த ஆசை நிறைவேறுவது சந்தேகம் என, கூறப்படுகிறது.
பஸ்களை பராமரிக்க, பி.எம்.டி.சி., முதல் முறை டெண்டர் அழைத்த போது, ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே பங்கேற்றது. எனவே மேலும் இரண்டு முறை, டெண்டர் அழைத்தது. இதில் பங்கேற்ற நிறுவனங்கள் அதிக தொகையை குறிப்பிட்டிருந்தனர். கி.மீ.,க்கு 97 ரூபாய் கேட்கின்றன. இதை குறைக்க நிறுவனங்கள் சம்மதிக்கவில்லை.
இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகைக்கு, டெண்டர் அளித்தால் அதிக நஷ்டம் ஏற்படும். எனவே டெண்டர் வழங்க பி.எம்.டி.சி., தயங்குகிறது. அது மட்டுமின்றி, இந்த நிறுவனங்கள் வேறு மாநிலங்களில், டெண்டர் பெற்றிருந்தும் சரியாக பஸ்களை இயக்கவில்லை. எனவே இவைகளுக்கு டெண்டர் அளிக்க, பி.எம்.டி.சி., தயாராக இல்லை. இதனால், டபுள் டெக்கர் பஸ் இயக்கும் திட்டத்தை கை விட, பி.எம்.டி.சி., ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.