ADDED : மார் 03, 2025 01:25 AM

மும்பை,மஹாராஷ்டிராவின் ஜால்கோன் மாவட்டத்தில் நடந்த திருவிழாவின்போது, தன் மகள் உள்ளிட்ட சிறுமியரை சிலர் கிண்டல் செய்தும், பின் தொடர்ந்தும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் ரக் ஷா காட்சே, 37, போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
இங்குள்ள ஜால்கோன் மாவட்டத்தின் முக்தாய் நகரில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, பிப்., 28ம் தேதி இரவு திருவிழா நடந்தது. அதில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இளைஞர் நலம், விளையாட்டுத் துறை இணையமைச்சர் ரக் ஷா காட்சேவின் மகள், தன் தோழியருடன் பங்கேற்றார்.
அப்போது, திருவிழாவில் பங்கேற்ற சில இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள், இந்த சிறுமியரை பின்தொடர்ந்து சென்றனர். கிண்டல், கேலி செய்த அவர்கள், சிறுமியரிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து முக்தாய் நகர் போலீசில், மத்திய இணையமைச்சர் ரக் ஷா காட்சே நேற்று புகார் கொடுத்தார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் பட்னவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டுஉள்ளதாவது:
திருவிழாவின்போது, முக்தாய் நகரைச் சேர்ந்த அனிகெட் குய் மற்றும் அவருடைய நண்பர்கள், பெண்களை கேலி செய்தும், சீண்டலில் ஈடுபட்டதாகவும் வேறு சிலரும் புகார் கூறியுள்ளனர். தற்போது, மத்திய இணையமைச்சரின் மகளுக்கும் துன்புறுத்தல் நடந்துள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனிகெட் குய் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மற்றவர்களை தேடி வருகிறோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.