உலக 'ஸ்கை டைவிங்' தினம் : வானில் பறந்த மத்திய அமைச்சர்
உலக 'ஸ்கை டைவிங்' தினம் : வானில் பறந்த மத்திய அமைச்சர்
ADDED : ஜூலை 14, 2024 05:43 AM

ஹரியானா: உலக 'ஸ்கை டைவிங்' தினத்தை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், வானில் பறந்து அசத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை உலக ஸ்கைடைவிங் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி ஹரியானாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், இந்தியாவின் முதல் ஸ்கை டைவிங் விமானத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஹரியானாவின் நர்னால் விமான ஓடுதளத்தில், நாட்டிலேயே முதன்முதலாக அமைக்கப்பட்டுள்ள ஸ்கை டைவிங் பகுதியிலிருந்து புறப்பட்ட விமானத்தில் பறந்த ஷெகாவத், உதவியாளரின் உதவியுடன் ஸ்கை டைவிங் செய்து அசத்தினார்.
விமானத்தில் இருந்து குதித்து, அந்தரத்தில் அவர் ஸ்கை டைவிங் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தன் 56வது வயதில் ஆகாயத்தில் பாராசூட் உதவியுடன் பறந்த ஷெகாவத், பத்திரமாக தரையிறங்கிய பின் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது:
இது மிகவும் ஒரு சிலிர்ப்பான அனுபவமாக இருந்தது. துபாய், சிங்கப்பூர், தாய்லாந்து, நியூசிலாந்து மற்றும் பிற இடங்களில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இந்த விளையாட்டுகளை அனுபவித்து வந்தனர்.
இப்போது அவர்கள் அதை நம் நாட்டிலும் அனுபவிக்கலாம். இது சுற்றுலாவை மேம்படுத்தும். மத்திய பிரதேசம், கோவா உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் ஸ்கை டைவிங்கை ஊக்குவிக்க விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.