சுரங்க ஆவணத்தில் போலி கையெழுத்து மத்திய அமைச்சர் குமாரசாமி 'பகீர்'
சுரங்க ஆவணத்தில் போலி கையெழுத்து மத்திய அமைச்சர் குமாரசாமி 'பகீர்'
ADDED : ஆக 22, 2024 04:06 AM
பெங்களூரு: “சுரங்கத் தொழிலுக்கு அரசு நிலம் வழங்கியதாக கூறப்பட்ட ஆவணத்தில், என் கையெழுத்து போலியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை தடயவியல் ஆய்வகத்துக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளட்டும்,” என மத்திய அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
சுரங்க முறைகேடு வழக்கில், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு, கவர்னரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
சாய் வெங்கடேஷ்வரா நிறுவனத்துக்கு குண்டூசி அளவுக்கு கூட அரசு நிலம் வழங்கவில்லை. அந்நிறுவனம் சுரங்கத் தொழிலும் செய்யவில்லை. சுரங்கத் தொழில் செய்வதற்கு மத்திய அரசு அனுமதியே வழங்கவில்லை.
இப்படி இருக்கும்போது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, கவர்னரிடம் சிறப்பு பலனாய்வு குழு எப்படி அனுமதி கேட்கும்? என் மீது மாநில அரசு சூழ்ச்சி செய்கிறது. இதற்கு அஞ்சி ஓடுபவன் நான் அல்ல. சட்டப்படி போராடுவேன்.
இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்த காங்கிரஸ் தலைவர்கள், இப்போது விழித்துக் கொண்டுள்ளனர். நான் மத்திய அமைச்சராக இருப்பதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை எதிர்த்து, 2014ல் நான் நீதிமன்றத்தில் முறையிட்டேன். இப்போது ஏன் அந்த விஷயத்தை எடுத்தனர்? சுரங்கத் தொழிலுக்கு அரசு நிலம் வழங்கியதாக கூறப்பட்ட ஆவணத்தில், எனது போலி கையெழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதை தடயவியல் ஆய்வகத்துக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளட்டும். பா.ஜ.,வினர் மீது, 21 வழக்குகள் உள்ளன. காங்கிரசாரால் ஒரு வழக்கையும் நிரூபிக்க முடியவில்லை. இறந்து போன விஷயத்தை மீண்டும் தோண்டி எடுத்துள்ளனர்.
முதல்வர் சித்தராமையா செய்துள்ள முறைகேடுகள் என்னிடம் உள்ளன. இதை சரியான நேரத்தில் வெளியிடுவேன். முதல்வர் மீது லோக் ஆயுக்தாவில் 61 வழக்குகள் உள்ளன. இதில், 50க்கும் அதிகமான வழக்குகளில் இதுவரை விசாரணையே நடத்தப்படவில்லை.
சட்டவிரோத செயல்களில் சித்தராமையா ஈடுபடுவதாக, முதல்வர் இல்லத்தில் இருந்தே எனக்கு தகவல்கள் கிடைக்கின்றன. முதல்வர் இல்லத்தில், சட்ட வல்லுனர்கள் என்னென்ன செய்கின்றனர் என்று எனக்கு தெரியும்.
இவ்வாறு அவர்கூறினார்.