வயலில் இறங்கி நாற்று நட்ட மத்திய அமைச்சர் குமாரசாமி
வயலில் இறங்கி நாற்று நட்ட மத்திய அமைச்சர் குமாரசாமி
ADDED : ஆக 12, 2024 07:22 AM

மாண்டியா: மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, அரளகுப்பே கிராமத்தில் வயலில் இறங்கி நாற்று நட்டார்.
மத்திய அமைச்சர் குமாரசாமி, நேற்று மாண்டியா மாவட்டத்துக்கு வந்தார். பாண்டவபுராவின், அரளகுப்பே கிராமத்தின் விவசாயி லட்சுமணுக்கு சொந்தமான வயலில் இறங்கி, நாற்று நட்டு பயிரிடும் பணியை துவக்கி வைத்தார். அவருடன் ம.ஜ.த., தலைவர்களும் நாற்று நட்டனர்.
முன்னதாக, காவிரி தாய்க்கு பூஜை செய்தார். 2018லும், இது போன்று குமாரசாமி காவிரிக்கு பூஜை செய்த பின், வயலில் நாற்று நட்டார். இம்முறையும் நாற்று நட்டு, விவசாயிகளை உற்சாகப்படுத்தினார். பின் குமாரசாமி அளித்த பேட்டி:
கே.ஆர்.எஸ்., அணை நிரம்பியுள்ளது. எனவே அரளகுப்பே கிராமத்துக்கு வந்து, நாற்று நடும்படி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதற்கு இணங்கி, பெண் விவசாயிகளுடன் சேர்ந்து நாற்று நட்டேன். நான் முதல்வராக இருந்த போது, முதன் முறையாக நாற்று நட்டேன். இப்போது மத்திய அமைச்சராக உள்ளேன். விவசாயிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில், இங்கு வந்தேன்.
கடந்த 2018ல், நான் நாற்று நட்ட போது நல்ல மகசூல் கிடைத்தது. அறுவடை நடந்த போதும், நான் அங்கு சென்று பூஜை செய்தேன். விவசாயிகளின் கஷ்டங்களை நேரில் பார்த்தேன். எவ்வளவு கஷ்டம் வந்தாலும், விவசாயிகள் பயிரிடுவதை நிறுத்தவில்லை. இந்த நாடு வளமாக இருக்க வேண்டும் என்றால், விவசாயிகள் பிழைக்க வேண்டும்.
கெங்கல் ஹனுமந்தையா கட்டிய விதான் சவுதாவில், முதல்வர் நாற்காலி கெட்டியாக உள்ளது. ஆனால் அதன் மீது அமர்ந்துள்ளவரின் பதவி உறுதியாக இல்லை.
மூடா ஊழலை கண்டித்து, பா.ஜ., - ம.ஜ.த.,வினரும் மைசூரு வரை பாதயாத்திரை நடத்தினோம். அரசின் விதிமீறல்களுக்கு எதிராக, நாங்கள் நிரந்தரமாக போராடுவோம்.
நமது கர்நாடகா கருவூலம், எப்போதும் செழிப்பாக இருக்கும். இத்தகைய கருவூலத்தை காங்கிரஸ் கொள்ளை அடிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

