மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை: ஜிகஜினகி அதிருப்தி
மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை: ஜிகஜினகி அதிருப்தி
ADDED : ஜூன் 23, 2024 06:25 AM

விஜயபுரா: ''ஏழு முறை எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். எனக்கு மத்திய அமைச்சராகும் அனைத்து தகுதியும், பணி மூப்பும் இருந்தும், உட்கட்சிப் பூசலால் வாய்ப்பு தவறியது,'' என, விஜயபுரா பா.ஜ., - எம்.பி., ரமேஷ் ஜிகஜினகி அதிருப்தி தெரிவித்தார்.
விஜயபுராவில் நேற்று அவர் கூறியதாவது:
நான் அமைச்சராக வேண்டும் என்பது தான், வட கர்நாடக மக்களின் விருப்பமாக இருந்தது. ஏழு முறை எம்.பி.,யானேன். எனக்கு மத்திய அமைச்சராகும் அனைத்து தகுதியும், பணி மூப்பும் இருக்கிறது.
மத்திய அமைச்சர் பதவிக்கு, மாநில தலைவர்கள் எனது பெயரை பரிந்துரைப்பர் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். உட்கட்சிப் பூசலால், எனக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை.
என்னை அமைச்சரவையில் சேர்க்காததற்கு, பிரதமர் மோடி உட்பட யாரையும் பொறுப்பாளியாக்க விரும்பவில்லை.
மூத்த தலித் தலைவர் என்ற முறையில், பா.ஜ.,வில் நான் வளராமல் தடுக்க, கட்சிக்குள் வேலைகள் நடந்தன. இதற்கு தேசிய தலைவர்கள் அல்ல, மாநில தலைவர்கள் தான் காரணம்.
கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்தினர், வட மாவட்டங்களில் அதிகளவில் உள்ளனர். ஆனால் அச்சமுதாயத்தினர் குறைவாக உள்ள தெற்கு மாவட்டங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.