தண்ணீர் பிரச்னையை கண்டித்து பல்கலை மாணவியர் போராட்டம்
தண்ணீர் பிரச்னையை கண்டித்து பல்கலை மாணவியர் போராட்டம்
ADDED : மே 12, 2024 07:02 AM
பெங்களூரு: விடுதியில் தண்ணீர் பிரச்னையை கண்டித்து, பெங்களூரு பல்கலைக்கழக மாணவியர் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதியில், இரண்டு ஆண்டுகளாக தண்ணீர் பிரச்னை உள்ளது. இது பற்றி மாணவியர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தனர். ஆனால் அவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை.
நான்கு மாதங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது. தண்ணீர் பற்றாக்குறையும் அதிகமாக இருக்கிறது. பல்கலைக்கழக விடுதியில் மாணவியர் மிகவும் அவதிப்பட்டனர். இதை விடுதி வார்டனும் கண்டுகொள்ளவில்லை. கொதிப்படைந்த மாணவியர், நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு பல்கலைக்கழகத்தின் ஞானபாரதி பிரதான சாலையில் மாணவியர் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், காலிக் குடங்கள், பக்கெட்டுகளுடன் சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர். வார்டனை கண்டித்தனர்.
மாணவியரின் போராட்டத்தால், ஞானபாரதி பிரதான சாலையில், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகளும் பயணியரும் பரிதவித்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார், மாணவியரை சமாதானம் செய்து, அனுப்பி வைத்தனர்.