மூணாறில் வரலாறு காணாத வெப்பம் சுற்றுலா பயணிகள் தவிப்பு
மூணாறில் வரலாறு காணாத வெப்பம் சுற்றுலா பயணிகள் தவிப்பு
ADDED : மே 03, 2024 02:34 AM

மூணாறு:மூணாறில் கடந்த 25 ஆண்டுகளை ஒப்பிடுகையில் வரலாறு காணாத அளவில் வெப்பம் அதிகரித்துள்ளதால் சுற்றுலா வந்த பயணிகள் தவிக்கின்றனர்.
தென்னகத்து காஷ்மீர் எனப்படும் மூணாறில் ஆண்டு முழுவதும் நிலவும் மாறுபட்ட காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதுண்டு. அதுபோன்று தற்போது கோடையில் இருந்து விடுபட குளுமையை தேடி வந்த பயணிகள் வழக்கமான காலநிலை இன்றி பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். இப்பகுதியில் நிலவும் வெப்பத்தால் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.
மூணாறில் கோடை காலங்களில் குறைந்தபட்ச வெப்பம் 10 டிகிரி முதல் அதிகபட்ச வெப்பம் 24 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். ஆனால் இந்தாண்டு கடந்த 25 ஆண்டுகளை ஒப்பிடுகையில் வரலாறு காணாத அளவில் வெப்பம் அதிகரித்தது. குறைந்தபட்ச வெப்பம் 11 டிகிரி முதல் அதிகபட்ச வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது.
ஏப்.28, 29 ல் 29 டிகிரியாக இருந்த வெப்பம் ஏப்.30ல் 30 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரித்தது. கடந்த இரண்டு நாட்களாக 28 டிகிரி செல்சியஸ் இருந்தது. இதற்கு முன் அதிகபட்சமாக கடந்த 2021 மார்ச் 9ல் வெப்பம் 28 டிகிரி செல்சியஸ் நிலவியது குறிப்பிடதக்கது.
குறைவு
இந்நிலையில் இங்கு கோடை மழை குறைந்தது. கடந்தாண்டு ஜன. 1 முதல் ஏப்.30 வரை 35.47 செ.மீ., மழை பதிவான நிலையில் இந்தாண்டு அதே கால அளவில் 15.52 செ.மீ., மழை பெய்தது. இது கடந்தாண்டை விட 20.18 செ.மீ., குறைவாகும்.