ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்கை கைது செய்ய உ.பி., கோர்ட் உத்தரவு
ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்கை கைது செய்ய உ.பி., கோர்ட் உத்தரவு
ADDED : ஆக 20, 2024 07:42 PM
சுல்தான்பூர்:
மின்சார வினியோக குறைபாட்டைக் கண்டித்து 2001ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பான வழக்கில், நேற்று நடந்த விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் ஆம் ஆத்மி கட்சி ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங்கை கைது செய்து, 28ம் தேதிக்குள் ஆஜர்-படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லி சப்ஜி மண்டி மேம்பாலம் அருகே, 2001ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., அனூப் சந்தா தலைமையில், மின்சார வினியோக குறைபாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதுதொடர்பாக, கோட்வாலி நகர் போலீசார் அனூப் சந்தா, சஞ்சய் சிங், முன்னாள் கவுன்சிலர்கள் கமல் ஸ்ரீவஸ்தவா, விஜயகுமார், சந்தோஷ், சுபாஷ் சவுத்ரி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால், அனூப் மற்றும் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் ஆஜராகவில்லை.
அப்போது, ஆஜரான சஞ்சய் சிங் தரப்பு வழக்கறிஞர் மதன் சிங், “சஞ்சய் சிங் மற்றும் அனூப் சந்தா ஆகியோர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர். அதன் மீதான விசாரணை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது,”என்றார்.
இதையடுத்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சஞ்சய் சிங் உள்ளிட்டோரை கைது செய்து வரும் 28ம் தேதிக்குள் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.