மாநகராட்சியில் இருந்து ஆம் ஆத்மியை வெளியேற்ற சதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் குற்றச்சாட்டு
மாநகராட்சியில் இருந்து ஆம் ஆத்மியை வெளியேற்ற சதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 26, 2024 01:44 AM
புதுடில்லி:டில்லி மேயர் தேர்தலை நிறுத்தவும், மாநகராட்சியில் இருந்து ஆம் ஆத்மி கட்சியை வெளியேற்றவும் சதி நடப்பதாக மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் குற்றஞ்சாட்டினார்.
மொத்தம் 250 உறுப்பினர்களைக் கொண்ட டில்ல மாநகராட்சியில் ஆம் ஆத்மிக்கு 137 கவுன்சிலர்களும், பா.ஜ.,வுக்கு 105 கவுன்சிலர்களும் உள்ளனர்.
மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடக்கிறது. முதல்வர் சிறையில் இருக்கும் நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலராக யாரை நியமிப்பது என்பது குறித்து, ஆளும் அரசுக்கு தெரிவிக்காமல், துணை நிலை கவர்னருக்கு தலைமைச் செயலர் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தல் நடத்தும் அலுவலரை நியமிக்கும் விவகாரத்தில் தலைமைச் செயலர் நரேஷ் குமார், விதிகளை மீறி செயல்பட்டுள்ளார்.
தேர்தல் நடத்தும் அலுவலரை நியமனம் செய்வதற்கான பரிந்துரையை என்னைத் தவிர்த்து, துணை நிலை கவர்னருக்கு ரகசியமாக அனுப்பியுள்ளார்.
அந்த கோப்பை திருப்பி அனுப்புமாறு, துணை நிலை கவர்னருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். தலைமைச் செயலருக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளேன்.
அந்த கடிதத்தில், எந்த விதியின் கீழ் என்னைப் புறக்கணித்து துணை நிலை கவர்னருக்கு கோப்பை அனுப்பினார் என்று கேள்வி எழுப்பியுள்ளேன். இந்த கடிதத்தின் நகலை, கவர்னருக்கு எழுதிய கடிதத்துடன் இணைத்துள்ளேன்.
கவர்னரின் செயலர், 'இந்த விஷயத்தில் கவர்னர் நடவடிக்கை எடுப்பார்' என்று உறுதி அளித்துள்ளார்.
நாளை (இன்று) மேயர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிப்பதற்கான கோப்பு இன்னும் எனக்கு கிடைக்கவில்லை.
முக்கிய பணிகள் முடங்கியுள்ள நிலையில், துணை நிலை கவர்னர், கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று கேள்விப்பட்டோம்.
டில்லி மேயர் தேர்தலை நிறுத்தவும், ஆம் ஆத்மி கட்சியை மாநகராட்சியில் இருந்து வெளியேற்றவும் பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு சதி செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

