இந்தியாவுக்கு எதிராக சதி அமெரிக்கா மீது குற்றச்சாட்டு
இந்தியாவுக்கு எதிராக சதி அமெரிக்கா மீது குற்றச்சாட்டு
ADDED : மே 10, 2024 01:28 AM
புதுடில்லி, 'லோக்சபா தேர்தல் நேரத்தில் இந்தியாவை சீர்குலைப்பதே அமெரிக்காவின் நோக்கம்' என, ரஷ்ய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசின் கீழ் செயல்படும், யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப்., எனப்படும், சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷன் என்ற அமைப்பு, தங்கள் ஆண்டறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இதில், இந்திய அரசு மத சுதந்திரத்துக்கு எதிராக செயல்படுவதாக தெரிவித்து இருப்பதுடன், இந்தியாவை கவலை அளிக்கும் நாடாக அறிவிக்கும்படி அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.
யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப்., வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம்:
இந்தியாவில் ஆட்சியில் உள்ள பா.ஜ., அரசு, சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம், குடியுரிமை திருத்த சட்டம், மதமாற்றம் மற்றும் பசுவதை தடுப்பு சட்டங்களை தொடர்ச்சியாக அமல்படுத்தி வருகிறது. இதனால், மத சிறுபான்மையினரும், அவர்கள் சார்பாக வாதிடுவோரும், தன்னிச்சையான தடுப்புக்காவலுக்கும், கண்காணிப்புக்கும் இலக்காகின்றனர்.
மத சிறுபான்மையினர் குறித்து செய்தி வெளியிடும் ஊடகங்களும், அவர்களுக்காக பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வெளிநாட்டு நன்கொடை தடுப்பு சட்டத்தின் கீழ் தீவிர கண்காணிப்புக்கு ஆளாகின்றனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதை திட்டவட்டமாக மறுத்துள்ள நம் வெளியுறவுத்துறை அமைச்சகம், அமெரிக்க கமிஷன், இந்தியாவின் தேர்தலில் மூக்கை நுழைப்பதுடன், நாட்டுக்கு எதிரான பிரசாரத்தை செய்து வருவதாக குற்றஞ்சாட்டியது. இந்த விவகாரம் குறித்து, ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஸாகாரோவா கூறியுள்ளதாவது:
அமெரிக்காவுக்கு, இந்தியாவின் தேசிய மனநிலை மற்றும் வரலாறு பற்றிய புரிதல் இல்லை. எனவே, இந்தியாவின் மத சுதந்திரம் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைக்கிறது. இது இந்தியாவிற்கு மிகுந்த அவமரியாதை. இந்தியாவின் உள்நாட்டு அரசியல் நிலவரத்தை சீர்குலைப்பதும், அங்கு நடந்து வரும் லோக்சபா தேர்தலை சிக்கலாகுவதுமே இந்த குற்றச்சாட்டின் நோக்கமாக உள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.