ADDED : ஏப் 28, 2024 03:36 AM

புதுடில்லி: இந்தியாவின் மசாலா பொருட்கள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை யடுத்து, அவை குறித்த தகவல்களை அமெரிக்க உணவு பாதுகாப்பு மையம் சேகரித்து வருவதாக, அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எவரெஸ்ட் மற்றும் எம்.டி.எச்., மசாலா பொருட்கள், ஐரோப்பா, ஆசியா மற்றும் வடஅமெரிக்க நாடுகளில் விற்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில், இந்நிறுவனங்களின் சில மசாலா பொருட்களில், புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லி அதிக அளவில் இருப்பதாக கூறி, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாடுகள் அந்த மசாலா பொருட்களுக்கு தடை விதித்தது.
இந்நிலையில், தடைவிதிக்கப்பட்டுள்ள இந்திய நிறுவனங்களின் சில மசாலா பொருட்கள் பற்றிய அந்நாடுகளின் அறிக்கை, மற்றும் அப்பொருட்களின் தற்போதைய நிலை குறித்த, கூடுதல் தகவல்களை சேகரித்து வருவதாக, அமெரிக்க உணவு பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மசாலா பொருட்களின் தரத்தை ஆய்வு செய்யுமாறு, இந்திய உணவு பொருள் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு மத்திய அரசும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டில், எம்.டி.எச்., தயாரிப்பின் சில பொருட்களில் பாதிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருப்பதாக கூறி, அமெரிக்கா தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

