அயோத்தி ராமர் சிலையை வடிவமைத்த சிற்பிக்கு அமெரிக்கா விசா மறுப்பு
அயோத்தி ராமர் சிலையை வடிவமைத்த சிற்பிக்கு அமெரிக்கா விசா மறுப்பு
ADDED : ஆக 15, 2024 12:03 PM

புதுடில்லி: அயோத்தி ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி அருண் யோகிராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்துள்ளது. அமெரிக்காவில் நடக்க உள்ள உலக கன்னட மாநாடு நிகழ்ச்சியில் பங்கேற்க, யோகிராஜ் விண்ணப்பித்திருந்தார்.
அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை எனப்படும் புனித நிகழ்வு கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி நடந்தது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் சிலையானது கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் என்பவரால் வடிவமைக்கப் பட்டதாகும். ராமர் சிலையை வடிவமைத்த பிறகு, அருண் யோகிராஜீக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
தொழில் தான் முக்கியம்
மைசூர் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., படித்த அருண் யோகிராஜ், தனியார் நிறுவனத்தில் மனிதவளத் துறையில் ஆறு மாதங்கள் பயிற்சி பெற்றார். இவர் குடும்ப பாரம்பரியமான சிலை செய்யும் தொழிலை முன்னெடுத்துச் செல்ல, தனியார் துறை வேலையை விட்டுவிட்டு மைசூருக்கு வந்துவிட்டார்.
செதுக்கிய சிலைகள் என்னென்ன?
இவர் கேதார்நாத்தில் வைக்கப்பட்டுள்ள 12 அடி உயர ஆதி சங்கராச்சாரியார் சிலை, டில்லியில் உள்ள இந்தியா கேட் அருகே நிறுவப்பட்டுள்ள சுபாஷ் சந்திரபோஸ் சிலை, மைசூர் மாவட்டத்தில் உள்ள 21 அடி உயர அனுமன் சிலை, 15 அடி உயர அம்பேத்கர் சிலை, ஆறு அடி உயர நந்தியின் சிலை ஆகியவற்றை செதுக்கியுள்ளார்.
விசா மறுப்பு
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் 20 நாள் பயணமாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சிற்பி அருண் யோகிராஜ் அமெரிக்கா செல்லவிருந்தார். அமெரிக்காவின் கன்னட கூட்டாஸ் சங்கம் சார்பில் நடக்க உள்ள, உலக கன்னட மாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். இதனால் விசாவிற்கு விண்ணப்பித்திருந்தார். விசா வழங்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால் விண்ணப்பத்தை ஏன் நிராகரித்தது என்பதற்கான காரணத்தை, அமெரிக்க தூதரகம் இதுவரை தெரிவிக்கவில்லை.