ADDED : மே 03, 2024 06:45 AM

உத்தர கன்னடா லோக்சபா தொகுதி, முக்கிய தலைவர்களை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பிய தொகுதியாகும். மார்கரெட் ஆல்வா, அனந்த் நாக் உட்பட, பல தலைவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் லோக்சபா தேர்தலின், முதற்கட்ட ஓட்டு பதிவு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. 14 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், பாதுகாப்பாக உள்ளது.
தற்போது இரண்டாம் கட்ட தேர்தலுக்கு, அனைத்து கட்சிகளும் தயாராகின்றன. வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு பிரசாரம் செய்கின்றனர். தினமும் நள்ளிரவு வரை பிரசாரம் செய்கின்றனர்.
உத்தரகன்னடா தொகுதிக்கும், மே 7ல் இரண்டாம் கட்டத்தில் ஓட்டு பதிவு நடக்கவுள்ளது. கடலோரம், மலைப்பகுதி, திறந்தவெளி பகுதிகள் அடங்கிய உத்தரகன்னடா தொகுதியில், இம்முறை இன்னாள் எம்.பி., அனந்தகுமார் ஹெக்டேவுக்கு சீட் கிடைக்கவில்லை.
முன்னாள் சபாநாயகர் விஷ்வேஸ்வர ஹெக்டே காகேரியை, பா.ஜ., மேலிடம் களமிறக்கியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக அஞ்சலி நிம்பால்கர் போட்டியிடுகிறார்.
உத்தரகன்னடா முக்கிய தலைவர்களை தோற்கடித்த தொகுதியாகும். இதற்கு முன் கெனரா தொகுதி என்றும் அழைக்கப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகி, வக்கீலும், பத்திரிகையாளருமான ஜோகிம் ஆல்வா, இந்த தொகுதியின் முதல் எம்.பி., யாவார். 1952, 1957, 1962ல் வெற்றி பெற்று எம்.பி.,யாக இருந்தார்.
பிரபல கவிஞர் பிரம்ம தினகர தேசாயி, 1967ல் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1971 தேர்தலில் இவர், காங்கிரஸ் வேட்பாளர் பி.வி.நாயக்கிடம் தோற்ற பின், அரசியலில் இருந்து விலகினார்.
அதன்பின் பிரபல எழுத்தாளர் சிவராம் காரந்த், நடிகர் அனந்த் நாக், முன்னாள் முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே உட்பட பல முக்கிய தலைவர்கள், உத்தரகன்னடாவில் போட்டியிட்டு தோற்றுள்ளனர்.
கடந்த 1989 லோக்சபா தேர்தலில், ராமகிருஷ்ண ஹெக்டே போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1980 மற்றும் 1984ல் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற தேவராஜ் நாயக், 1989ல் மூன்றாவது முறையாக போட்டியிட்டார்.
அந்த தேர்தலில் இவரை எதிர்த்து நடிகர் அனந்தநாக், எழுத்தாளர் சிவராம் காரந்த் களமிறங்கினர். இருவருமே தோற்றனர்.
ஜோகிம் ஆல்வாவின் மருமகள் மார்கரெட் ஆல்வா, இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1999ல் எம்.பி.,யாக வெற்றி பெற்றார். 2004ல் தோல்வி அடைந்தார்.
இதே தேர்தலில் ஜனதா தளம் சார்பில் நடிகர் ராமகிருஷ்ணா போட்டியிட்டார். பா.ஜ.,வின் அனந்தகுமார் ஹெக்டே வெற்றி பெற்றார்.
கடந்த 1996, 1998ல் வெற்றி பெற்ற ஹெக்டே, 1999ல் போட்டியிட்டார். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் காங்கிரசின் மார்கரெட் ஆல்வாவிடம் தோற்றார். அதன்பின் 2004, 2009, 2014, 2019ல் ஹெக்டே தொடர்ந்து வெற்றிக்கனியை பறித்தார்
- நமது நிருபர் -
.