'க்யூட்' தேர்வு சேர்க்கைக்கு பிந்தைய காலி இடத்தை பல்கலையே நிரப்பலாம்
'க்யூட்' தேர்வு சேர்க்கைக்கு பிந்தைய காலி இடத்தை பல்கலையே நிரப்பலாம்
ADDED : ஆக 01, 2024 11:38 PM

புதுடில்லி: 'க்யூட்' நுழைவுத்தேர்வு வாயிலாக மாணவர் சேர்க்கை முடிந்த பின், காலியாக உள்ள இடங்களை பல்கலைகள் நிரப்பிக் கொள்ள, யு.ஜி.சி., வழிகாட்டுதல்கள் வகுத்துள்ளன.
நாடு முழுதும் உள்ள மத்திய பல்கலைகளில் கலை, அறிவியல் பாடங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் சேர, 'க்யூட்' எனப்படும், பொதுப் பல்கலை நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
நுழைவுத் தேர்வு முடிந்து, அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு அட்மிஷன் வழங்கப்படுகிறது. சேர்க்கை முடிந்த பின்னும் சில பல்கலைகளில் இடங்கள் காலியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழு வகுத்துஉள்ளது.
இது குறித்து யு.ஜி.சி., தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியதாவது:
மூன்று - நான்கு சுற்று கலந்தாய்வு முடிந்த பிறகும் சில பல்கலைகளில் இடங்கள் காலியாக இருப்பது கவனத்துக்கு வந்தது.
கல்வியாண்டு முழுதும் இடங்களை காலியாக வைத்திருப்பது வளங்களை வீணடிப்பதோடு மட்டுமல்லாமல், மத்திய பல்கலைகளில் உயர்கல்வி படிக்க விரும்பும் பல மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி மறுக்கப்படுவதற்கும் காரணமாக அமையும்.
க்யூட் தேர்வு எழுதிய மாணவர், சம்பந்தப்பட்ட பல்கலையில் குறிப்பிட்ட பாடப்பிரிவில் சேர விண்ணப்பிக்காமல் இருந்தாலும், அவரை சேர்க்கைக்கு பரிசீலிக்கலாம்.
எனவே, கலாந்தாய்வுக்கு பின் காலியாக உள்ள இடங்களை, பல்கலைகள் சொந்தமாக நுழைவுத் தேர்வு நடத்தியோ அல்லது தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலோ நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த சேர்க்கை நடைமுறை வெளிப்படையாகவும், தகுதி அடிப்படையிலும் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.