வால்மீகி ஆணைய அதிகாரி தற்கொலை எம்.டி., உட்பட 2 பேர் 'சஸ்பெண்ட்'
வால்மீகி ஆணைய அதிகாரி தற்கொலை எம்.டி., உட்பட 2 பேர் 'சஸ்பெண்ட்'
ADDED : மே 30, 2024 01:55 AM

பெங்களூரு: வால்மீகி மேம்பாட்டு ஆணைய அதிகாரி தற்கொலை வழக்கில், ஆணையத்தின் நிர்வாக இயக்குனர், கணக்கு அதிகாரி ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து, கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது.
வால்மீகி சமூக மேம்பாட்டு ஆணைய கண்காணிப்பாளராக பணியாற்றிய சந்திரசேகர், 52, ஆணையத்துக்கு அரசு ஒதுக்கிய நிதியில் முறைகேடு நடப்பதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, 27ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
ஷிவமொகா வினோபா நகரில் உள்ள சந்திரசேகர் வீட்டில், சி.ஐ.டி., அதிகாரிகள் சோதனை நடத்தினர். சந்திரசேகரின் லேப்டாப்பில் இருந்த, சில தகவல்களை பென்டிரைவில் காப்பி செய்து எடுத்துச் சென்றனர்.
இரண்டாவது நாளாக நேற்றும், சி.ஐ.டி., சோதனை தொடர்ந்தது. சந்திரசேகர் மனைவி கவிதாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சந்திரசேகர் பயன்படுத்திய பேனா உள்ளிட்ட, பொருட்களை எடுத்துச் சென்றனர்.
அறைகளுக்கு 'சீல்'
சந்திரசேகர் மரண கடிதத்தில், ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் பத்மநாபா, கணக்கு அதிகாரி பரசுராம் துக்கண்ணவர், வங்கி அதிகாரி சுஷிஷ்மதா ரவுல் ஆகியோர் பெயர்களை குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் பத்மநாபாவும், பரசுராமும் தலைமறைவாகினர். நேற்று மதியம் வால்மீகி சமூக மேம்பாட்டு ஆணைய அலுவலகத்திற்கு சென்ற சி.ஐ.டி., அதிகாரிகள் பத்மநாபா, பரசுராம் அறைகளுக்கு 'சீல்' வைத்தனர். அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து, பழங்குடியினர் நலத் துறை நேற்று மதியம் உத்தரவிட்டது.
பா.ஜ., போராட்டம்
இந்நிலையில், 187 கோடி ரூபாய் முறைகேட்டில், வங்கி அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக, ஆணையத்தின் பொது மேலாளர் ராஜசேகர், ஹைகிரவுண்ட் போலீஸ் நிலையத்தில், நேற்று மதியம் புகார் அளித்தார். விசாரணை நடக்கிறது.
சந்திரசேகர் தற்கொலைக்கு பொறுப்பு ஏற்று, பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா பதவி விலக வலியுறுத்தி, அவரது சொந்த ஊரான பல்லாரியில் நேற்று, பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். அவரது உருவ பொம்மையை எரித்தனர்.