வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில் ஹவாலா முறையில் பணம் சுருட்டியது அம்பலம்
வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில் ஹவாலா முறையில் பணம் சுருட்டியது அம்பலம்
ADDED : ஜூன் 30, 2024 10:43 PM
பெங்களூரு: கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணையில், பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. ஹவாலா வழியில் மோசடி நடந்திருப்பதை, எஸ்.ஐ.டி., கண்டுபிடித்துள்ளது.
கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணைய அதிகாரி சந்திரசேகர், 48, சமீபத்தில் ஷிவமொகாவில் தன் வீட்டில், தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன், இவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், ஆணையத்தில் நடந்த ஊழல்களை விவரித்திருந்தார்.
ஆணையத்தின் பணத்தை சட்டவிரோதமாக வேறு கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்ய, தனக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறியிருந்தார்.
இது தொடர்பாக, விசாரணை நடத்த மாநில அரசு எஸ்.ஐ.டி., அமைத்துள்ளது. எஸ்.ஐ.டி., அதிகாரிகளும் விசாரணை நடத்தி, பலரை கைது செய்துள்ளனர். வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் பணம், ஹைதராபாத்தின் கூட்டுறவு வங்கிகளுக்கு மாற்றப்பட்டது தெரிந்தது. 94 கோடி ரூபாய்க்கும் அதிகமான முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் பல விஷயங்கள் ஒன்றன் பின் ஒன்றாக, வெளிச்சத்துக்கு வருகின்றன. ஹவாலா வழியில் பணத்தை சுருட்டியுள்ளனர். முதலில் வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் பணத்தை, ஹைதராபாத்தின் கூட்டுறவு வங்கியின், 18 கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது.
அதன்பின் இங்கிருந்து, பார், தங்க நகைக்கடை, ஹோட்டல்கள், சில ஐடி., நிறுவனங்களின் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்து, பணத்தை எடுத்துள்ளனர். இதற்காக பார், ஹோட்டல், ஐடி., நிறுவனங்களுக்கு கமிஷன் கொடுத்துள்ளனர்.
விசாரணையில் 193 கணக்கு விபரங்கள் கிடைத்தன. இதில் இருந்த 10 கோடி ரூபாயை, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். வால்மீகி ஆணையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர், முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவருக்கு, பணம் பரிமாற்றம் செய்திருப்பது தெரிந்தது.
ஆணையத்தின் முன்னாள் இயக்குனர் பத்மநாத், ஹைதராபாத்தின் கூட்டுறவு வங்கியின் தலைவர் சத்யநாராயண், முன்னாள் அமைச்சருக்கு வேண்டப்பட்ட நாகராஜ், நாகேஸ்வர்ராவ் ஆகியோர் எஸ்.ஐ.டி., கஸ்டடியில் உள்ளனர்.
முறைகேட்டில் முக்கிய பங்கு வகித்த கார்த்தி சீனிவாஸ் தலைமறைவாக இருக்கிறார். அவரை தேடி வருகின்றனர்.
பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதால், அமலாக்கத்துறையும் தனியாக விசாரணையில் இறங்கியுள்ளது.
எஸ்.ஐ.டி., வசம் உள்ளவர்களிடம், தகவல் கேட்டறிந்துள்ளது. வரும் நாட்களில் மேலும் பல விபரங்கள் அம்பலமாகும்.