ADDED : மே 30, 2024 09:55 PM

- நமது நிருபர் - இயற்கையுடன் இணைந்து வாழும் குடகு மக்கள், விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். வர்த்தக விளைச்சல்களுக்கு நடுவில் நெல் பயிரிடுகின்றனர். வன தேவதையை பூஜித்து வணங்குகின்றனர்.
குடகின் அனைத்து வனப்பகுதிகளிலும் இப்போதும் வன தேவதைக்கு கோவில் கட்டி வழிபடுகின்றனர். சில ஏக்கர் நிலத்தை 'கடவுள் வனம்' என்ற பெயரில் போற்றி பாதுகாக்கின்றனர். வனதேவதை தங்களை காவல் காப்பதாக மக்கள் நம்புகின்றனர்.
கிராம தேவதை
குடகின் பெரும்பாலான கிராமங்களில் பகவதி மற்றும் பத்ரகாளி காவல் தெய்வங்களாக விளங்குகின்றன. வனப்பகுதியை கடந்து செல்வோரை, பாதுகாப்பதாக ஐதீகம்.
சில நுாற்றாண்டுகளுக்கு முன், குடகு அடர்ந்த காடாக இருந்தது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல, காட்டுப்பாதை வழியாக நடந்து செல்ல வேண்டும்; விலங்குகளின் அபாயமும் இருந்தது. எனவே வனப்பாதையில் நடந்து செல்வோர், வழியில் இருக்கும் கிராம தேவதைகளுக்கு காணிக்கை செலுத்தி பயணத்தின் போது தங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல், காப்பாற்ற வேண்டும் என, பிரார்த்தனை செய்த பின், பயணத்தை தொடர்வர்.
இந்த நடைமுறை இப்போதும் தொடர்கிறது. முன்பு போன்று தற்போது அடர்ந்த வனப்பகுதி இல்லை. பெரும்பாலான பகுதிகள் தோட்டங்களாக மாறின. வீடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. மக்கள் தொகை அதிகரித்ததால், குடியிருப்புகளும் அதிகரித்துள்ளன. வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளது.
வாகனத்தில் சென்றாலும், விபத்து ஏற்படக்கூடாது என, கிராம தேவதைகளிடம் பிரார்த்தனை செய்து, காணிக்கை செலுத்திய பின், பயணத்தை தொடர்வது வழக்கம். குறுகலான சாலைகள் கொண்டுள்ள, சில கிராமங்களில் விபத்துகள் நடக்கின்றன. இத்தகைய பகுதிகளில் செல்லும் போது, விபத்து நடக்காமல் காப்பாற்றும்படி கடவுளிடம் வேண்டுவது வழக்கம்.
சாலைகளில் செல்லும் போது பல கோவில்கள் தென்பட்டாலும், வனப்பகுதி கோவில்களில் மட்டும் பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். குடகின் பல்வேறு வனப்பகுதிகளில், வன துர்கை, வன பத்ரகாளி, தேவி என, பல அவதாரங்களில் மக்களுக்கு காவலாக நின்றுள்ளார். ஜாதி, மதம் பாகுபாடின்றி வன தேவதையை வணங்குகின்றனர்.
விராஜ்பேட், கோணிகொப்பா சாலை இடையே வரும், ஹாதுார், கொளத்துார், பைகோடு வன பத்ரகாளி மிகவும் பிரசித்தி பெற்றவர்.
வளர்ப்பு பிராணி
மடிகேரி - குஷால்நகர் சாலையின் கெதகல்லின் பத்ர காளேஸ்வரி, மடிகேரி - சுள்யா பாதையின், தேவரகொல்லி அருகில் சாமுண்டேஸ்வரி என கிராம தேவதைகளின் பட்டியல் நீள்கிறது. சில வனப்பகுதிகளில், வேட்டை அய்யப்ப சுவாமி, ஈஸ்வரர் என ஆண் கடவுள்களும் உள்ளனர்.
விவசாயமே உயிர்நாடியாக இருந்த காலத்தில் ஆடு, மாடுகள் போன்ற வளர்ப்பு பிராணிகளுக்கு, வன விலங்குகளால் ஆபத்து ஏற்பட கூடாது என்றும், வன தேவதைகளிடம் பிரார்த்தனை செய்வர். காணிக்கையாக மண் அல்லது வெள்ளி சிலைகளை அர்ப்பணிப்பர். இந்த வழக்கம் இப்போதும் நடைமுறையில் உள்ளது.