ADDED : ஆக 15, 2024 04:06 AM
பெங்களூரு : கர்நாடகாவில் ஆண்டுதோறும் வரமஹாலட்சுமி பண்டிகை, வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை வரமஹாலட்சுமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகையை கொண்டாட, இல்லத்தரசிகள் தயாராகி வருகின்றனர். பண்டிகையின் போது, வழக்கமானதை விட பூக்கள் விலை சற்று அதிகமாக இருக்கும். இந்த முறை பூக்கள் விலை, கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.
பெங்களூரு கே.ஆர்., மார்க்கெட்டில் பூக்களுக்கு, கடும் கிராக்கி ஏற்பட்டு இருக்கிறது. கடந்த மாதம் கிலோ 1,000 முதல் 1,500 ரூபாய் வரை இருந்த கனகாம்பரம் பூ, தற்போது ஒரு கிலோ 3,000 ரூபாயாக உள்ளது.
கடந்த மாதம் 140 முதல் 200 ரூபாயாக இருந்த மல்லிகை, தற்போது 600 முதல் 800 ரூபாயாகவும்; கடந்த மாதம் கிலோ 140 ரூபாய்க்கு விற்பனையான ரோஜாப்பூ, 240 முதல் 270 ரூபாய் வரையிலும்; கடந்த மாதம் 120 முதல் 130 வரை விற்ற சாமந்தி, தற்போது 200 முதல் 240 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.
இதுகுறித்து கே.ஆர்.மார்க்கெட் பூ வியாபாரிகள் கூறுகையில், 'பொதுவாக பண்டிகை நேரத்தில், வழக்கமான விலையை விட பூக்கள் விலை சற்று அதிகமாக இருக்கும். இந்த முறை மழை அதிகம் பெய்ததால், பூக்களுக்கு கடும் டிமாண்ட் ஏற்பட்டு உள்ளது. இன்னும் ஓரிரு நாட்கள் விலை அதிகமாக இருக்கும். பின், பூக்கள் விலை குறைந்துவிடும்' என்றனர்.