ADDED : மே 02, 2024 06:36 AM

பாகல்கோட்: லோக்சபா தேர்தலில் போட்டியிட, 'சீட்' கிடைக்காததால் விரக்தியில் உள்ள வீணா காசப்பனவர், அரசியலுக்கு முழுக்கு போட தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலில் பாகல்கோட் தொகுதி சீட் கேட்டு காங்கிரஸ் கட்சியில், அமைச்சர் சிவானந்த் பாட்டீலின் மகள் சம்யுக்தா, எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவரின் மனைவி வீணா ஆகியோர் இடையே பலத்த போட்டி ஏற்பட்டது.
தங்களுக்கே சீட் வேண்டும் என, இருவரும் பிடிவாதம் பிடித்தனர். 10 ஆண்டாக கட்சிக்காக பணியாற்றுவதால், தனக்கு சீட் கிடைக்கும் என, வீணா நம்பினார். ஆனால் சம்யுக்தாவுக்கு மேலிடம் வாய்ப்பளித்தது.
மனைவிக்கு சீட் கிடைக்காததால், ஆரம்பத்தில் அதிருப்தியில் இருந்த விஜயானந்த் காசப்பனவர், அதன்பின் சமாதானமடைந்தார். 'வீணாவும் சமாதானம் அடைந்துள்ளார். பிரசாரத்துக்கு வருவார்' என, கூறினார். ஆனால் வீணாவின் கோபம் மாறவில்லை. கட்சி வேட்பாளர் சம்யுக்தாவுக்கு ஆதரவாக பிரசாரமும் செய்யவில்லை.
பல முறை சமாதான பேச்சு நடத்தியும் பயனில்லை. கங்காவதியில் நடந்த கட்சியின் பொதுக் கூட்டத்துக்கும் அவர் வரவில்லை. இந்நிலையில் வீணா காசப்பனவர், அரசியலுக்கு முழுக்குப் போட விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, முகநுாலில் அவர் நேற்றைய பதிவில், 'நாம் அழுதாலும் கண்களில் கண்ணீர் வரும், சிரித்தாலும் வரும். ஆனால் சிரிக்க வைத்தவர்கள், நான்கு நாட்கள் நினைவில் இருப்பர். வலியை கொடுத்து அழ வைத்தவர்கள், வாழ்நாள் முழுதும் நினைவில் இருப்பர்' என கூறியுள்ளார்.
வீணா காசப்பனவர், எனக்கு மட்டும் அக்கா இல்லை. பாகல்கோட் மாவட்டத்துக்கே அக்கா. குடும்பம் என்றால் கோபதாபங்கள் இருக்கும். நாங்கள் ஒரே குடும்பம். வீணா அக்காவும் எங்களுடன் இருப்பார். காசப்பனவர் குடும்பம் மிகவும் பெரியது. அவர்களால் எங்களுக்கு யானை பலம் வந்துள்ளது.
- சம்யுக்தா பாட்டீல், காங்கிரஸ் வேட்பாளர்.

