மாநில பொது செயலர் பதவியால் சமாதானம் ஆகாத வீணா காசப்பனவர்
மாநில பொது செயலர் பதவியால் சமாதானம் ஆகாத வீணா காசப்பனவர்
ADDED : ஏப் 05, 2024 11:23 PM

பாகல்கோட்: லோக்சபா தேர்தலில் பாகல்கோட் காங்கிரஸ் 'சீட்' கிடைக்காததால், அதிருப்தியில் இருந்த வீணா காசப்பனவருக்கு, கட்சியின் மாநில பொதுச் செயலர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர் இன்னும் சமாதானம் ஆகவில்லை.
பாகல்கோட் ஹுன்குந்த் காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர். இவரது மனைவி வீணா காசப்பனவர். பாகல்கோட் தொகுதி காங்கிரஸ் சீட் எதிர்பார்த்தார். அமைச்சர் சிவானந்தா பாட்டீல் மகள் சம்யுக்தாவிற்கு, சீட் கிடைத்தது.
வீணா அதிருப்தி அடைந்தார். ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். முதல்வர் சித்தராமையா சமாதானப்படுத்த முயன்றும், பலன் அளிக்கவில்லை.
அவருக்கு மாநில பொதுச் செயலர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் பொதுச் செயலர் பதவியை அவர் ஏற்கவில்லை.
பதவி கொடுத்ததால், வீணா சமாதானம் ஆகிவிடுவார் என, துணை முதல்வர் சிவகுமார் நினைத்தார். ஆனால் இதுவரை அவர் சமாதானம் ஆனதாக தெரியவில்லை.
இதனால் விஜயானந்த்தை, அமைச்சர் சிவானந்தா பாட்டீல் நேற்று சந்தித்துப் பேசினார். இதையடுத்து சம்யுக்தாவை ஆதரிப்பதாக, விஜயானந்த் கூறினார். வீணாவும் பிரசாரத்திற்கு வருவார் என்றும் தெரிவித்தார்.
இதை மறுக்கும் வகையில் நேற்று மதியம் வீணா வெளியிட்ட வீடியோவில், ''அமைச்சர் சிவானந்தா பாட்டீல், எங்கள் வீட்டிற்கு வந்தது உண்மை. நான் வீட்டில் இல்லை. உடல்நலக்குறைவால், பெங்களூரில் மருத்துவமனையில் உள்ளேன்.
''நான் இன்னும் சமாதானம் ஆகவில்லை. ஆதரவாளர்களிடம் இருந்து எனக்கு தினமும் மொபைல் போனில் அழைப்பு வருகிறது. சுயேச்சையாக போட்டியிடும்படி வலியுறுத்துகின்றனர். யோசித்து முடிவு எடுப்பேன்,'' என்றார்.
இதன்மூலம் சம்யுக்தாவை ஆதரிப்பதில், விஜயானந்த், வீணா இடையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

